தமிழ்நாடு

கரோனா: மக்கள் கூடும் இடங்களை மூட தமிழக அரசு ஆணை

16th Mar 2020 07:34 PM

ADVERTISEMENT


கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் மக்கள் கூடும் இடங்களை மூட தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், பல்வேறு அரசு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் இன்று (திங்கள்கிழமை) தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தின் முடிவில் கரோனா வைரஸ் பரவலதை் தடுக்கும் நோக்கில் பல்வேறு உத்தரவுகளை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவுகளின் முக்கிய அம்சங்கள்,

  • தமிழகத்தில் அனைத்து அரசு, மாநகராட்சி மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பயிற்சி மையங்கள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களும் மார்ச் 31-ஆம் தேதி வரை மூட வேண்டும்.
  • 10 முதல் 12-ஆம் வகுப்புகளுக்கான அரசுத் தேர்வுகள், கல்லூரித் தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்.
  • வெளிநாடுகளில் இருந்து வரும் இந்தியர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்க தேவையான வசதிகளை சென்னை, மதுரை, கோவை மற்றும் திருச்சி ஆகிய விமான நிலையங்களின் அருகிலேயே ஏற்படுத்த வேண்டும்.
  • அங்கன்வாடி மையங்கள் அனைத்தும் மார்ச் 31-ஆம் தேதி வரை மூடப்பட வேண்டும். இம்மையங்களில் உணவருந்தும் குழந்தைகளுக்கு 15 நாட்களுக்கான உணவுப் பொருட்களை அந்தந்த குடும்பத்திடம் வழங்க வேண்டும்.
  • அனைத்து திரையரங்குகள், மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், கேளிக்கை அரங்கங்கள், நீச்சல் குளங்கள், உயிரியல் பூங்காக்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் மார்ச் 31-ஆம் தேதி வரை மூடப்பட வேண்டும்.
  • திருவிழாக்கள், துக்க நிகழ்வுகள் உட்பட அனைத்து சமூக நிகழ்வுகளிலும் குறைந்த அளவிலேயே மக்கள் கூடுவதைக் கடைபிடிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
  • ஊர்வலங்கள், பொதுக் கூட்டங்கள், மாநாடுகள், கோடைக் கால பயிற்சி வகுப்புகள், முகாம்கள், கருத்தரங்குகள், வணிகக் கண்காட்சிகள், கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் போன்ற நிகழ்வுகளை நடத்த மார்ச் 31-ஆம்தேதி வரை அனுமதி வழங்கக் கூடாது.
  • அனைத்து விளையாட்டு அரங்குகள், கிளப்புகள், பார்கள் (டாஸ்மாக் பார்கள் உட்பட) கேளிக்கை விடுதிகள் போன்றவை மார்ச் 31-ஆம் தேதி வரை மூடப்பட வேண்டும்.
  • சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்கள் அலுவலகம் செல்வதைத் தவிர்க்கவும். கரோனா அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுக வேண்டும்.
  • கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் மற்றும் பிற வழிபாட்டுத் தலங்களில் கூட்டம் கூடுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.
  • கரோனா வைரஸ் காய்ச்சல் பற்றி பொய்யான செய்தியோ, வதந்தியோ அல்லது தேவையற்ற பீதியை செய்தியாகவோ, சமூக ஊடகங்களிலோ அல்லது வேறு எந்த வடிவிலோ பரப்பினால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
  • பொதுமக்கள் மற்ற மாநிலங்களுக்கு பயணிப்பதையும், பொது இடங்களில் அதிக அளவில் கூடுவதையும் அடுத்த 15 நாட்களுக்குத் தவிர்க்கவும்.
  • தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் உள்நாட்டுப் பயணிகளையும் தொடர் கண்காணிப்புக்கு உட்படுத்தி சோதனை செய்திட வேண்டும். 
  • அண்டை மாநிலங்களில் இருந்து கரோனா வைரஸ்  பரவாமல் கட்டுப்படுத்துவதற்கு, உடனடியாக எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு சோதனை சாவடிகளில், நோய் கண்காணிப்புப் பணிகள் மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்.
  • அண்டை மாநில எல்லையை ஒட்டி உள்ள சுங்கச் சாவடி அருகிலேயே பயணிகளின் உடல்நிலையை தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யத் தேவையான கட்டமைப்புகளை சுகாதாரத் துறை, போக்குவரத்துத் துறை, காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கண்காணிப்பில் ஏற்படுத்த வேண்டும்.
  • தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள், மாநகரப் பேருந்துகள், ரயில் நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், மெட்ரோ ரயில்கள், பொதுக் கழிவறைகள் போன்ற இடங்களில் கிருமிநாசினி மூலம் தினந்தோறும் தூய்மைப்படுத்திட வேண்டும்.
  • அனைத்து ரயில் நிலையங்களிலும், தெர்மல் ஸ்கேனர் மூலம் பயணிகளின் உடல் வெப்ப நிலையைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களையும், ரயில் பெட்டிகளையும் கிருமிநாசினி மூலம் தினந்தோறும் சுத்தம் செய்ய வேண்டும்.
  • ஒருங்கிணைந்த குளிர்சாதன வசதி உள்ள இடங்களில் வாரம் ஒருமுறையாவது கிருமிநாசினி கொண்டு முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும்.
  • சட்டப்பேரவைக் கூட்டத்தொடரைக் காண பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.
  • ஏற்கெனவே திட்டமிடப்பட்ட நிகழ்வுகள் தவிர வேறு எந்த நிகழ்ச்சிகளுக்கும் திருமண மண்டபங்களில் நடத்தக் கூடாது. திட்டமிடப்பட்ட நிகழ்வுகளிலும் கூட குறைந்த அளவிலேயே மக்கள் பங்கேற்க வேண்டும்.
  • கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் வழங்கியுள்ள நெறிமுறைகளை அனைத்து அரசுத் துறைகளும், பொதுத் துறைகளும், தனியார் நிறுவனங்களும் கடைபிடிக்க வேண்டும்.
  • பொதுமக்கள் குடும்பத்துடன் வெளியில் சுற்றுலா செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
  • சுற்றுலா பயணியர் தங்குமிடம் அனைத்தும் மார்ச் 31-ஆம் தேதி வரை மூடப்பட வேண்டும். மார்ச் 31-ஆம் தேதி வரை எவ்வித முன்பதிவும் செய்யக் கூடாது. 
  • பொதுமக்கள் வீட்டிற்குள் நுழையும் போதும், அவ்வப்போதும் கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவுவதை உறுதி செய்யவும். கைகளை சுத்தம் செய்யாமல் முகத்தைத் தொட வேண்டாம்.
  • கரோனா குறித்து அறிய சுகாதாரத் துறையின் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ளலாம். தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: 1014, 044-29510400, 044-29510500, 9444340496 மற்றும் 8754448477.

 

ADVERTISEMENT

இந்த உத்தரவுகள் அனைத்தும் 17.03.2020 முதல் நடைமுறைக்கு வருகிறது.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT