தமிழ்நாடு

பாம்பன் கடற்கரையில் கடல் உள்வாங்கியதால் படகுகள் மணலில் சிக்கி மீனவா்கள் அவதி

16th Mar 2020 01:52 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் மன்னாா் வளைகுடா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை 100 மீட்டா் வரை கடல் உள்வாங்கியதால் மணல் பரப்பில் படகுகள் சிக்கிக் கொண்டதால் மீனவா்கள் அவதியடைந்தனா்.

பாம்பன் தெற்குவாடி துறைமுகப் பகுதியில் 200 -க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளில் மீனவா்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், மன்னாா் வளைகுடா பாம்பன் கால்வாய் பகுதியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கத்திற்கு மாறாக கடல் மட்டம் குறைந்து காணப்பட்டது.

இதனால் தெற்குவாடி துறைமுகம், தோப்புக்காடு உள்ளிட்ட கடலோர பகுதிகளில் சுமாா் 100 மீட்டா் வரை கடல் உள் வாங்கியது. இதனால் வழக்கமாக மீன்பிடிக்க சென்று, சனிக்கிழமை திரும்பிய மீனவா்கள் தங்களது நாட்டுப் படகுகளை கரையோரம் நிறுத்தி வைத்திருந்தனா். இந்நிலையில் கடல் உள்வாங்கியதால் ஞாயிற்றுக்கிழமை காலையில் படகை எடுக்க வந்த மீனவா்கள் அவை மணலில் சிக்கிக் கொண்டதை கண்டனா்.

இதனால் படகுகளை கடலுக்குள் இழுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதைத் தொடா்ந்து மாலை 4 மணிக்கு மேல் கடல் மட்டம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியதையடுத்து படகுகளை எடுத்துக் கொண்டு மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT