தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகள் போதுமானதல்ல என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா முத்தரசன் கூறியுள்ளார்.
புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை தொடங்கிய அக்கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாமைத் தொடங்கி வைக்க வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது..
மத்திய அரசின் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். அதுதான் எங்களின் கோரிக்கை. யாரையும் பாதிக்காது என்று பிரதமர், உள்துறை அமைச்சர் போன்றோர் தொடர்ந்து கூறி வந்தனர். ஆனால், திடீரென மாநிலங்களவையில் குடிமக்கள் யாரும் ஆதாரங்களைத் தர வேண்டிய அவசியமில்லை என்று உள்துறை அமைச்சர் கூறியுள்ளார். இந்த ஏமாற்று வேலைகளை மக்கள் நம்ப மாட்டார்கள். அதேபோலத்தான் தமிழ்நாட்டிலும் வருவாய்த் துறை அமைச்சர் கூறியிருக்கிறார்.
மத ரீதியாக மக்களை சட்டப்படி பிரிக்கும் மத்திய அரசின் முயற்சியை எதிர்த்து கோவை, மதுரை, சென்னை போன்ற பெருநகரங்களில் மாநாடுகளை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். தொடர்ந்து ஏப். 19ஆம் தேதி திருச்சியிலிருந்து வேதாரண்யம் வரை நடைப்பயணம் நடத்துகிறோம். இதே தேதியில் தான் உப்பு சத்தியாகிரக போராட்டம் நாட்டின் விடுதலைக்காக நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் இந்த வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை போதுமான அளவுக்கு தமிழக அரசு எடுத்ததாகத் தெரியவில்லை. எவ்வித கட்டுமானங்களும் நடைபெறவில்லை. திடீரென பெருமளவில் தொற்று ஏற்பட்டால் எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளைக் காணவில்லை.
ஆனால், சட்டப்பேரவையில் இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்பினால், உங்களுக்கு வயது ஆகிவிட்டது, சர்க்கரை இருக்கிறது என்பதற்காகப் பயப்படாதீர்கள் என்றெல்லாம் கூறி தீவிரமான ஒரு பிரச்னையை நகைச்சுவையாக மாற்றுகிறார்கள். இது சரியல்ல.
ரஜினிகாந்த் எதையும் புதிதாகச் சொல்லவில்லை. ஆட்சிக்கு ஒரு தலைமை, கட்சிக்கு ஒரு தலைமை என்பது புதிய செய்தியே அல்ல. தமிழ்நாட்டில் பக்தவத்சலம் முதல்வராக இருந்தபோது அப்போது அவர் காங்கிரஸ் தலைவர் அல்ல. இப்போது புதுச்சேரியில் நாராயணசாமி முதல்வராக இருக்கிறார். அந்த மாநில காங்கிரஸ் தலைவர் அவரல்ல. மேற்குவங்கத்தில் ஜோதிபாசு நீண்டகாலம் முதல்வராக இருந்தார். அப்போது அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் அல்ல. கேரளத்தில் அச்சுதமேனன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முதல்வராக இருந்தபோதும், அவர் அம்மாநில கட்சியின் தலைவரல்ல.
எனவே, ரஜினிகாந்த் சொன்னது எதுவும் புதிதல்ல. அதேநேரத்தில் அவர் தனது ரசிகர்களுக்கு சில செய்திகளைச் சொல்லியிருக்கிறார். அது அவர்களுக்குப் புரிந்ததா என்று ரசிகர்களிடம்தான் கேட்க வேண்டும். எனக்கு எதுவும் புரியவில்லை என்றார் முத்தரசன்.
பேட்டியின்போது, முன்னாள் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் திருச்சி எம். செல்வராஜ், புதுக்கோட்டை மாவட்டச் செயலர் மு. மாதவன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.