தூத்துக்குடி: தூத்துக்குடி தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் சுங்கத்துறை மற்றும் மத்திய கலால் துறை அதிகாரிகள் சோதனையிட்டு, பல லட்ச ரூபாய் ஜிஎஸ்டி முறைகேடு குறித்து விசாரணை நடத்தினார்கள்.
தூத்துக்குடியில் செயல்படக்கூடிய பல்வேறு ஏற்றுமதி நிறுவனங்கள் சரக்குகளை ஏற்றுமதி செய்யாமல் ஜிஎஸ்டி வரியை கட்டி அதன் மூலம் பெருமளவில் ஊக்கத்தொகை பெற்றதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக சுங்கத் துறை மற்றும் மத்திய கலால் துறை சார்ந்த மத்திய சரக்கு மற்றும் சேவை வரி துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் திருநெல்வேலி சேர்ந்த மத்திய சரக்கு மற்றும் சேவை துறை துணை ஆணையர் சுஜித் மேனன் தலைமையிலான 10 பேர் கொண்ட அதிகாரிகள் தூத்துக்குடி போல்டன்புரத்தில் உள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் 'திடீர்' சோதனை மேற்கொண்டனர்.
இதில் அந்த நிறுவனம் சரக்குகளை ஏற்றுமதி செய்யாமல் ஜிஎஸ் டி வரி கட்டி அதற்கான ஊக்கத் தொகையை பெற்று வந்தது தெரியவந்தது இதைத்தொடர்ந்து இந்த தனியார் ஏற்றுமதி நிறுவனத்தின்அலுவலகத்தில் இருந்து முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினார்கள். தொடர்ந்து தனியார் ஏற்றுமதி நிறுவனத்தின் உரிமையாளர் கணேசன் என்பவரை விசாரணைக்காக திருநெல்வேலி அழைத்துச்சென்றனர். இதுவரை சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஜிஎஸ்டி முறைகேடு நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் சங்கிலித் தொடர் போல் நடைபெற்று வருவதாகவும் அதிகாரி தரப்பில் தெரிவித்தனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.