தமிழ்நாடு

கரோனா எதிரொலி: திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் குளத்தில் குளிக்கத் தடை!

13th Mar 2020 04:58 PM

ADVERTISEMENT

 

கரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக காரைக்கால் சனீஸ்வரர் கோவில் குளத்தில் குளிக்கத் தடை விதித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிரூபர்களிடம் கூறியதாவது:

புதுச்சேரியில் 83 பேர் கரோனா பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டனர். அவர்களில் 16 பேர்களின் மாதிரி ரத்தம் எடுத்து ஆய்விற்கு அனுப்பப்பட்டது. 14 பேருக்கான முடிவு பாதிப்பு இல்லை என வந்துள்ளது. மீதியுள்ள 2 பேருக்கும் ஆய்வு முடிவு இன்று வந்துவிடும். அவர்கள் தொடர்ந்து தனி அறையில் வைத்துக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

இதுவரை புதுச்சேரியில் யாரும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர் ஒருவரும் இல்லை. அப்படியிருந்தாலும் வராமல் தடுக்க என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதைச் செய்து வருகின்றோம்.  உதாரணமாக வெண்டிலேட்டர், இன்சூலேட்டர், மாஸ்க் போன்ற உபகரணங்களை உடனடியாக வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

குறிப்பாக வெளிமார்க்கெட்டில் மாஸ்க் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது. இதனால் மத்திய அரசை அணுகி, பெற நடவடிக்கை எடுத்து வருகின்றோம். நோட்டீஸ் மூலம் இதுவரை 50 ஆயிரம் குடும்பங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம். பள்ளிகளில் மாணவர்களுக்கு கைகளை எவ்வாறு சோப்பு போட்டுக் கழுவ வேண்டும் என்று பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் கூடுபவர்கள் கரோனா அறிகுறி ஏதேனும் இருந்தால் அரசுக்குத் தெரிவிக்கவும் கூறப்பட்டுள்ளது. 

இசிஆர் சாலை வழியாகவும், பைபாஸ் சாலை வழியாகவும் புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மருத்துவர்களைக் கொண்டு பரிசோதித்த பின்னரே உள்ளே அனுமதித்து வருகிறோம். தொலைக் காட்சிகள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றோம். புதுச்சேரி மருத்துவர்கள் 3 பேர், ஜிப்மர் மருத்துவர்கள் மூன்று பேர் தில்லி சென்று, கரோனா பாதிப்பிற்கு மருத்துவம் செய்வது தொடர்பாகப் பயிற்சி எடுத்து வந்து, புதுச்சேரியில் உள்ள 100க்கும் மருத்துவர்களுக்குப் பயிற்சி கொடுத்துள்ளனர். உபகரணங்கள் வாங்கத் தேவையான நிதியை ஒதுக்கிக் கொடுத்துள்ளோம். பொது இடங்களில் கண்காணித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றோம்.

சீனாவில் மக்கள் நடமாட்டத்தைக் குறைந்ததால் நோயின் தாக்கம் குறைந்தது. தற்போது ஈரான், இத்தாலியில் அதிகரித்துள்ளது. கனடாவில் பிரதமர் மனைவிக்கே வந்துள்ளது. புதுச்சேரி விமான நிலையத்தில் பயணிகள் வரும்போதும், செல்லும்போதும் மருத்துவர்கள் மூலம் கண்காணிப்பு செய்யப்படுகின்றது. கரோனாவை பிரதமர் மோடி பேரிடர் என்று பிரதமர் அறிவித்துள்ளார். அதுபோல் மத்திய அரசு தினமும் கூறும் அறிவுரைகளை கடைப்பிடித்து வருகின்றோம்.

புதுச்சேரியில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. காரைக்கால் சனீஸ்வரர் கோவிலுக்கு வருபவர்களைத் தடுத்து நிறுத்த முடியாது. அதேசமயம் அங்குள்ள நள தீர்த்த குளத்தில் குளிக்க இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் குளித்தால் ஆடை விட்டுவிட்டுப் போய்விடுகின்றனர். யாருக்கேனும் கரோனா இருந்து, தண்ணீர் பாதித்தால் தொற்று ஏற்படும். எனவே ஸ்பிரே மூலம் நீரைத் தெளிக்க ஏற்பாடு செய்துள்ளோம். சந்தேகப்படுபவர்கள் அங்கும் பரிசோதனை செய்யப்படுகின்றனர்.

புதுச்சேரியில் உள்ள தனியார் பேருந்து, அரசு பேருந்துகளில் கிருமி நாசினிகளைத் தெளிக்கக் கூறியுள்ளோம். புதுச்சேரி அரசில் பயோ மெட்ரிக் பதிவு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. கல்வித்துறை தமிழ்நாடு பாடத்திட்டத்தைப் பின்பற்றுவதால் முன்கூட்டியே தேர்வுகளை முடிப்பதை முடிவு செய்ய முடியாது. பொது இடங்களில் அதிகமாக மக்கள் கூடுவதைத் தடுக்க வேண்டும் என்றார் முதல்வர் நாராயணசாமி.

ADVERTISEMENT
ADVERTISEMENT