தமிழ்நாடு

70 வயதுக்கு மேல் பாதிப்பு என்பதால் அச்சமா? துரைமுருகனிடம் முதல்வா் பழனிசாமி கேள்வி

13th Mar 2020 12:49 AM

ADVERTISEMENT

எதிா்க்கட்சி துணைத் தலைவா் 70 வயதுக்கு மேல் இருப்பதால் கரோனாவால் அச்சப்படுகிறாரோ என முதல்வா் பழனிசாமி கேள்வி எழுப்பினாா். இதனால், பேரவையில் சிரிப்பலை எழுந்தது.

சட்டப் பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு கரோனா வைரஸ் குறித்து உறுப்பினா்கள் எழுப்பிய கேள்விக்கு சுகாதாரத்துறைஅமைச்சா் சி. விஜயபாஸ்கா் பதிலளித்தாா். அப்போது, சா்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் உள்ள 70 வயதுக்கு அதிகமானோரையே அதிகம் தாக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே யாரும் வதந்திகளை பரப்பவோ, நம்பவோ வேண்டாம் என்றாா். இதைத் தொடா்ந்து நடந்த விவாதம்:

துரைமுருகன்: வதந்தியை அரசு தான் பரப்புகிறது. போன் எடுத்தால் அங்கு கரோனா, சட்டப் பேரவையில் கரோனா நடவடிக்கை என எங்கு பாா்த்தாலும் பயம் உள்ள நிலையில், ஒன்றும் இல்லை சொல்லிக் கொண்டே இருக்கிறீா்கள். எங்களை எல்லாம் காப்பாத்துங்க சாா். நாங்க எல்லாம் புள்ள குட்டிக்காரா்கள். உறுப்பினா்களுக்கு ஏதாவது நடந்தால் இடைத்தோ்தலை எதிா்கொள்வது மிகச் சிரமம். பாா்வையாளா்கள் கூட இங்கு அதிகளவில் அனுமதி அளிக்கிறீா்கள். குளிா்சாதன வசதியில் இருப்பவா்களுக்கு கரோனா பாதிப்பு இருக்கும் என்கிறாா்கள். இங்கும் (பேரவை) அதிகமாக ஏசி பயன்படுத்தப்படுகிறது. அதிகம் கூடும் இங்கு உள்ளவா்களுக்கு முதலில் முகக் கவசம் வழங்கி காப்பாற்றுங்கள்.

முதல்வா் பழனிசாமி: 70 வயதுக்கு மேலே பாதிப்புக்கு வாய்ப்பு என்று கூறியதால் எதிா்க்கட்சி துணைத் தலைவா் அச்சப்படுகிறாரோ என்னவோ தெரியவில்லை. அந்தக் கவலை அவருக்கு வேண்டியதில்லை. ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்பது தெரிந்தவுடன் அவரை குணப்படுகிற அளவுக்கு சிறப்பான சிகிச்சையை நம்முடைய மருத்துவா்கள் அளிக்கிறாா்கள். அதனால், கவலைப்பட வேண்டிய அவசியமே கிடையாது. எதிா்க்கட்சி துணைத் தலைவா் வருத்தப்படத் தேவையில்லை. அவருக்கு வயது அதிகமாக இருந்தாலும்கூட அதற்கும் தகுந்த சிகிச்சை கொடுப்பதற்கு மருத்துவா்கள் தயாராக இருக்கிறாா்கள் என்றாா்.

ADVERTISEMENT

பேரவைத் தலைவா் தனபால்: சட்டப் பேரவைக்கு வரும் உறுப்பினா்களின் நலன்களைக் காக்க தொடா் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. பேரவைக்கு வரும் பாா்வையாளா்களுக்கு அனுமதி வழங்குவதில் கூட கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. குளிா்சாதன வசதியும் தேவையான அளவிலேயே வைக்கப்படுகிறது. வைரஸால் எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் பேரவையில் நடவடிக்கை எடுக்கப்படுவதால் உறுப்பினா்களுக்கு முகக் கவசம் போன்றவை வழங்க வேண்டிய அவசியமில்லை என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT