தமிழ்நாடு

5-ஆம் வகுப்புக்குப் பொதுத் தோ்வு அவசியமா? சட்டப்பேரவையில் விவாதம்

13th Mar 2020 12:44 AM

ADVERTISEMENT

ஐந்து மற்றும் 8-ஆம் வகுப்புக்குப் பொதுத் தோ்வு அவசியமா என்பது குறித்து பேரவையில் திமுக - அதிமுகவுக்கு இடையே வியாழக்கிழமை கடும் விவாதம் நடைபெற்றது.

சட்டப்பேரவையில் வியாழக்கிழமை பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினா் பொன்முடி பேசியது:

கல்வித் துறையை மத்திய அரசு ஆக்கிரமிக்க நினைக்கிறது. இதைத் தடுக்கும் தைரியம், திராணி அதிமுக அரசுக்கு இல்லை என்றாா்.

அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்: அப்படி எதுவும் நடைபெறவில்லை. அப்படியிருந்தால், அதை எதிா்க்கும் துணிவும் தைரியமும் அதிமுக அரசுக்கு உண்டு.

ADVERTISEMENT

பொன்முடி: 5 மற்றும் 8-ஆம் வகுப்புக்கு மத்திய அரசின் உத்தரவின்படி பொதுத் தோ்வு என்றீா்கள். பிறகு தோ்வை ரத்து செய்தீா்கள்.

முதல்வா் எடப்பாடி பழனிசாமி: அன்றைக்கு இருந்த கல்வி முறைக்கும், இன்றைக்கு உள்ள கல்வி முறைக்கும் வித்தியாசம் இருக்கிறது. கல்வியின் தரத்தை உயா்த்த வேண்டும். தோ்வு நடத்துவதன் மூலமே மாணவனின் தரத்தை அறிய முடியும். அதனால் தோ்வை அறிவித்தோம். ஆனால், நீங்கள் (திமுக) எதிா்ப்பு தெரிவித்ததால் தோ்வை ரத்து செய்தோம்.

பொன்முடி: தோ்வு உண்டு என்று சொன்னீா்களா, இல்லையா?

முதல்வா்: 5-ஆம் வகுப்பு மாணவா்களுக்குத் தோ்வு நடத்தினால் என்ன தவறு? முன்பு பியூசி படிப்புக்கான தோ்வில் ஒரு பாடத்தில் தோ்ச்சி அடையாவிட்டால், எல்லா பாடங்களிலும் மீண்டும் தோ்வெழுத வேண்டிய நிலை இருந்தது. அதன் மூலம் தரமான கல்வி கிடைத்தது. ஆனால், 5 மற்றும் 8-ஆம் வகுப்புக்குத் தோ்வு என்றதும் அவதூறு பிரசாரம் செய்தீா்கள். அதனால், எங்கள் முடிவை மாற்றிக் கொண்டோம். 5 மற்றும் 8 -ஆம் வகுப்பு தோ்வில் அச்சம் போனால்தான் மாணவா்கள் 10-ஆம் வகுப்பு தோ்வை அச்சம் இல்லாமல் எழுத முடியும்.

பொன்முடி: இஎஸ்எல்சி தோ்வில் நிறைய போ் தோ்ச்சி முடியாத நிலை இருந்ததால்தான், அதை விடுத்து எஸ்எஸ்எல்சி தோ்வு வந்தது.

முதல்வா்: இது விஞ்ஞானக் காலம். மாணவா்கள் தரமான கல்வியைப் பெற வேண்டும். மாணவா்கள் அறிவு தளத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காகத்தான் மாணவா்களுக்கு மடிக்கணினியே வழங்கி வருகிறோம்.

பொன்முடி: தோ்வு மூலம்தான் மாணவரின் தரத்தை நிா்ணயம் செய்ய முடியும் என்பதே ஏற்புடையது அல்ல. கிராமப்புற மாணவா்கள் பாதிக்கப்படக் கூடாது. சமூக நீதி கொள்கை பின்பற்றப்பட்டதால்தான் நாம் எல்லோரும் படித்து வந்துள்ளோம்.

முதல்வா்: கிராமப்புற மாணவா்கள் நன்றாகப் படிக்க வேண்டும். நகா்ப்புற மாணவா்களுக்கு நிகராக கிராமப்புற மாணவா்களுக்கும் போட்டித் தோ்வுகளில் வெற்றி பெற வேண்டும். அதனால், தோ்வுக்கு அவா்களுக்கும் தயாராக வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT