கன்னியாகுமரி மாவட்டம், குளச்சலில் பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால், காங்கிரஸ் கட்சியினர் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
காந்தி நடத்திய தண்டி யாத்திரை நினைவாக, இளைஞர் காங்கிரஸார் குளச்சல் பேருந்து நிலையத்தில் இருந்து இரணியலுக்கு பேரணி செல்ல ஏற்பாடு செய்திருந்தனர். இப்பேரணிக்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லையாம். இந்நிலையில், இளைஞர் காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ் தலைமையில், குளச்சல் பேருந்து நிலையம் முன் வியாழக்கிழமை கூடிய காங்கிரஸார், தொடர்ந்து பேரணியாக செல்ல முயன்றனர். இதை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் போலீஸாருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு திரும்பிவிடுவதாக கூறினார்.
இதற்கிடையில், போலீஸார் அனுமதி மறுத்ததைக் கண்டித்தும், போலீஸாரின் நடவடிக்கைகளை கண்டித்தும் இளைஞர் காங்கிரஸார் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீஸார் லேசான தடியடி நடத்தி அவர்களை கலைந்து போகச் செய்தனர்.