தமிழ்நாடு

புதுச்சேரி, அரக்கோணத்தில் 4 பேருக்கு கரோனா அறிகுறி

13th Mar 2020 02:37 AM

ADVERTISEMENT

புதுச்சேரி, அரக்கோணத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறிகளுடன் 4 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
 புதுச்சேரியில் உள்ள மருத்துவமனைகளில் கரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறியுடன் இதுவரை 3 பேர் சேர்க்கப்பட்டனர்.
 இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை இயக்குநர் எஸ். மோகன்குமார் கூறியதாவது:
 புதுச்சேரியில் ஜிப்மர், கோரிமேடு அரசு மார்பகப் புற்றுநோய் மருத்துவமனை, பிம்ஸ் தனியார் மருத்துவமனை ஆகியவற்றில் கரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறிகளுடன் 3 பேர் சேர்க்கப்பட்டனர்.
 மேலும், அவர்களது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்காக மகாராஷ்டிர மாநிலம், புணேவில் உள்ள மத்திய அரசின் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும், ஜிப்மர் மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ள ஆய்வுக் கூடத்திலும் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்படுகிறது.
 இந்த ஆய்வு முடிவுகள் வந்த பிறகே கரோனா வைரஸ் உள்ளதா என்பது தெரியவரும் என்றார்.
 அரக்கோணத்தில்...
 அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு வியாழக்கிழமை வந்த இளைஞருக்கு கரோனா அறிகுறி இருந்ததை அடுத்து, அவர் உடனடியாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அரக்கோணம் மாணிக்கமுதலி தெருவைச் சேர்ந்தவர் பி.என்.வெங்கட் (21). பொறியியல் பட்டதாரி. இவர், கடந்த வாரம் கேரளத்துக்குச் சென்றிருந்தாராம். அங்கு வெளிநாட்டில் இருந்து வந்திருந்த சிலருடன் சேர்ந்து தங்கியிருந்ததாகத் தெரிகிறது.
 இந்நிலையில், அரக்கோணம் திரும்பிய 3 நாள்களில் சளி, இருமல், காய்ச்சல் இருந்துள்ளது. சிகிச்சை பெற வெங்கட், வியாழக்கிழமை அரக்கோணம் அரசு மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவ அலுவலர், அவருக்கு கரோனா அறிகுறி இருப்பதாகத் தெரிவித்தார். இதையடுத்து வெங்கட் மருத்துவமனையிலேயே தனிமைப்படுத்தப்பட்டார். உடனே ஆம்புலன்ஸ் மூலம் இருவரையும் சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அவர்கள் வசித்து வந்த மாணிக்கமுதலி தெரு, வீடு, உறவினர்கள், நண்பர்களை மருத்துவக் கண்காணிப்பில் வைக்க மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT