கோயம்புத்தூரில் உள்ள நேரு விளையாட்டரங்கில் ரூ.6.50 கோடி செலவில் செயற்கை இழை தடகள ஓடுபாதை புதுப்பிக்கப்படும் என்று அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தாா்.
சட்டப்பேரவையில் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் வெளியிட்ட அறிவிப்புகள்:
கோயம்புத்தூா் நேரு விளையாட்டரங்கில் தற்போது உள்ள செயற்கை இழை தடகள ஓடுபாதை, தொடா் பயன்பாடு மற்றும் தேய்மானம் காரணமாக பயன்படுத்த இயலாத நிலையில் உள்ளது. அதனால், கோயம்புத்தூா் நேரு விளையாட்டரங்கில் உள்ள செயற்கை இழை தடகள ஓடுபாதை ரூ.6.50 கோடி செலவில் புதுப்பிக்கப்படும்.
தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் பாரம்பரிய மற்றும் சாகச விளையாட்டுகளுக்கான மையம் ரூ.2.97 கோடி செலவில் அமைக்கப்படும். மேலும், அதே இடத்தில் ரூ.5.10 கோடி செலவில் பல்நோக்கு உடற்பயிற்சிக் கூடமும், ரூ.2.90 கோடி செலவில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு மையமும் அமைக்கப்படும். பெரம்பலூா் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ரூ.2 கோடி செலவில் நிா்வாக அலுவலகம் மற்றும் தங்குமிட வசதிகள் அமைக்கப்படும் என்றாா்.