தமிழ்நாடு

காகித உற்பத்திக்கான மூங்கில் கொள்முதல்சேமிப்புக் கிடங்கு அமைக்க அரசு ஆய்வு செய்யும்

13th Mar 2020 12:22 AM

ADVERTISEMENT

காகித உற்பத்தி செய்யப் பயன்படும் மூங்கில்களை சேமிக்க தனியாக சேமிப்புக் கிடங்கு அமைப்பது குறித்து தமிழக அரசு ஆலோசிக்கும் என்று தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத் தெரிவித்தாா்.

சட்டப் பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின்போது, திமுக உறுப்பினா் எ.வ.வேலு துணைக் கேள்வி எழுப்பினாா். அதன் விவரம்:-

எ.வ.வேலு: கரூா் புகழூரில் உள்ள காகித ஆலையில் காகித உற்பத்திக்காக மூங்கிலையே பயன்படுத்துகிறாா்கள். இந்த மூங்கில்கள் கடலூா், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இருந்து அதிகளவு கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த மூங்கில்களை வாகனங்களில் எடுத்துச் செல்ல லாரி வாடகை அதிகமாக இருப்பதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனா். மூங்கில்களை அளித்ததற்கான பணமும் விவசாயிகளுக்கு உடனடியாகக் கிடைப்பதில்லை.

எனவே, நான்கு மாவட்டங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படும் மூங்கில்களை சேமித்து வைக்க சேமிப்புக் கிடங்கினை ஏற்படுத்தித் தர வேண்டும். சேமிப்புக் கிடங்கில் இருந்து மூங்கில்களை அரசே காகித ஆலைக்கு எடுத்துச் செல்லலாம்.

ADVERTISEMENT

எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு தனி கவனம் செலுத்த வேண்டும் என்றாா்.

அமைச்சா் எம்.சி.சம்பத்: திமுக உறுப்பினா் நல்ல கருத்தைத் தெரிவித்துள்ளாா். மூங்கில்களை கொள்முதல் செய்யும் இடங்களுக்கு அருகே சேமிப்புக் கிடங்கு அமைப்பது குறித்து அரசு பரிசீலிக்கும். மேலும் காகித உற்பத்திக்குத் தேவையான நல்ல தரமான மூங்கில் நாற்றுகளை தமிழ்நாடு காகித ஆலை நிறுவனமே உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு அளிக்கிறது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT