தமிழ்நாடு

உயர்நீதிமன்றத் தீர்ப்பால் ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம் இல்லை என்பது நிரூபணம்

13th Mar 2020 02:35 AM

ADVERTISEMENT

சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை உற்றுநோக்கிப் பார்க்கும் போது, துணைநிலை ஆளுநருக்கு என தனிப்பட்ட அதிகாரம் இல்லை என்பது நிரூபணம் ஆகியுள்ளதாக முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.
 இதுகுறித்து புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அவர் மேலும் கூறியதாவது: அரசின் அன்றாட நடவடிக்கைகளில் ஆளுநர் தலையிடுவதற்கு தடை விதிக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல்வரின் நாடாளுமன்றச் செயலர் க.லட்சுமி நாராயணன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, புதுவையை மாநிலமாகக் கருத வேண்டும் என்றும், ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரமில்லை என்றும் தீர்ப்பு வழங்கினார்.
 இதை எதிர்த்து புதுவை துணைநிலை ஆளுநரும், மத்திய உள்துறை அமைச்சகமும் மேல்முறையீடு செய்தன. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அடங்கிய 2 நபர் அமர்வு வழங்கிய தீர்ப்பில் யூனியன் பிரதேசமாக உள்ள புதுவையை மாநிலமாக கருத முடியாது என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் சில கருத்துகளையும் நீதிபதிகள் சரியாக தெளிவுபடுத்தியுள்ளனர். துணைநிலை ஆளுநருக்கு என தனிப்பட்ட அதிகாரம் இல்லை. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அமைச்சர்களே நிர்வாகத்துக்கு முழுப் பொறுப்பு.
 இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கூறியுள்ளபடி, மக்களால் தேர்வு செய்யப்பட்ட அமைச்சரவையைத் தாண்டி யாருக்கும் அதிகாரம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. கோப்புகளில் சந்தேகம் இருந்தால், சம்பந்தப்பட்ட துறைச் செயலரிடம் ஆளுநர் எழுத்துப்பூர்வமாக விளக்கம் கேட்கலாம். அதற்கான பதிலை செயலர் அளிக்கும் போது, முதல்வரின் ஒப்புதலைப் பெற்றுத்தான் ஆளுநருக்கு அளிக்க வேண்டும். அதேநேரம், முதல்வர் மற்றும் அமைச்சர்களை நேரடியாக அழைத்து விளக்கம் கேட்கும் உரிமை ஆளுநருக்கு இல்லை. அமைச்சரவை அனுப்பும் கோப்புகள், முடிவுகளில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், அதை ஆளுநர் தானாக நிராகரிக்கக் கூடாது. அதில், திருத்தம் செய்து அமல்படுத்தவும் அதிகாரிகளை வற்புறுத்தக் கூடாது. மாறாக, கருத்து வேறுபாடுள்ள கோப்புகளை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பலாம். அமைச்சர்கள் அனுப்பும் கோப்புகளை நிராகரிக்கவோ, திருத்தம் செய்யவோ, தன்னிடமே வைத்திருக்கவோ துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை.
 ஆளுநர் அனுப்பும் கோப்புகளை மத்திய அரசு நடுவராக மட்டுமே கண்காணித்து உத்தரவு அளிக்க வேண்டும். சட்டப்பேரவையில் மசோதா அல்லது தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், அது எந்த நோக்கத்துக்காக நிறைவேற்றப்பட்டது என்று மட்டுமே பார்க்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்குத்தான் முக்கியத்துவம் தர வேண்டும். நியமிக்கப்பட்டவர்களுக்கு இல்லை. சட்டப்பேரவையை மீறிய அதிகாரம் யாருக்கும் அரசியலமைப்புச் சட்டத்தில் கொடுக்கப்படவில்லை என்றும் அந்தத் தீர்ப்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
 இந்த நிலையில், அமைச்சரை அழைத்து விசாரிப்பேன் என்று ஆளுநர் கூறியிருப்பது தவறானது. தீர்ப்பைப் பின்பற்றி, அனைத்து அதிகாரிகளுக்கும் நிலை ஆணை பிறப்பிக்க முடிவு செய்துள்ளேன். அதன்படி நடைபெறாவிட்டால், நீதிமன்றத்தை அவமதிப்பு செய்வதாகும்.
 நீதிமன்றத் தீர்ப்பானது முழுமையாக மக்கள் ஆட்சிக்கே ஆதரவாக வழங்கப்பட்டுள்ளது. இலவச அரிசி தொடர்பான தீர்ப்பில் மேல்முறையீடு செய்யவுள்ளேன். இனி, ஆளுநர் தனிப்பட்ட முறையில் அதிகாரிகளை அழைத்துக் கூட்டம் நடத்தினால் அது நீதிமன்ற அவமதிப்பாகும். யாராக இருந்தாலும், தீர்ப்பை முழுமையாகப் படித்து பார்த்துதான் கருத்துகளைக் கூற வேண்டும் என்றார் முதல்வர் நாராயணசாமி.
 முதல்வரின் நாடாளுமன்றச் செயலர் க.லட்சுமி நாராயணன் உடனிருந்தார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT