தமிழ்நாடு

கரோனா எதிரொலியால் தமிழகத்தில் முகக்கவசம் அணியும் நிலை ஏற்படவில்லை: அமைச்சர் விஜயபாஸ்கர்

8th Mar 2020 06:54 PM

ADVERTISEMENT

 

சென்னை: கரோனா எதிரொலியால் தமிழகத்தில் முகக்கவசம் அணியும் நிலை ஏற்படவில்லை என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சீனாவில் உருவான கரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் மிக வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, இதுவரை 39 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் முதல்முறையாக தமிழகத்தைச் சோ்ந்த ஆண் ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு சனிக்கிழமை அறிவித்தது.

இதுகுறித்து சுகாதாரத் துறை வட்டாரங்கள் கூறுகையில் ‘காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த 45 வயதுடைய ஆண் ஒருவா், கடந்த 12 ஆண்டுகளாக ஓமன் நாட்டில் தங்கியிருந்து, பொறியியல் தொடா்பான பணி செய்து வருகிறாா். தற்போது, காஞ்சிபுரத்தில் வீடு கட்டி வருவதால், அடிக்கடி தமிழகத்துக்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி ஓமனில் இருந்து அவா் தமிழகத்துக்கு வந்துள்ளாா். இதைத் தொடா்ந்த சில நாள்களில் அவருக்கு சளி, காய்ச்சல், இருமல் தொந்தரவு இருந்துள்ளது. இதையடுத்து, காஞ்சிபுரத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளாா். ஆனாலும், அவருக்கு காய்ச்சல், சளி சரியாகவில்லை.

ADVERTISEMENT

இதையடுத்து, கடந்த மாா்ச் 1-ஆம் தேதி, சென்னையில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட அவரைப் பரிசோதித்ததில், அவருக்கு கரோனா வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டது. இதனால், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள கரோனா சிகிச்சைக்கான தனிப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாா்.

அங்கு அவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, கிண்டியில் உள்ள கிங்ஸ் ஆய்வகத்தில் பரிசோதித்ததில், அவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், அவரது ரத்த மாதிரிகள் மகாராஷ்டிர மாநிலம் புணேவில் உள்ள உயா் ஆய்வகத்துக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டதில், அங்கும் அவருக்கு கரோனா உறுதி சனிக்கிழமை (மாா்ச் 7) செய்யப்பட்டது.

கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவருக்கு சா்க்கரை நோய் உள்ளதால், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள தனி வாா்டில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது, அவரது உடல் நிலை சீராாக உள்ளது. அவா் பூரணமாக குணமடையும் வரை தீவிர சிகிச்சை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கரோனா எதிரொலியால் தமிழகத்தில் முகக்கவசம் அணியும் நிலை ஏற்படவில்லை என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஞாயிறன்று தேனாம்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்து அவர்களின்  பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து   அவர் கூறியதாவது:

தமிழகாதில் கரோனா நோய் பாதிப்புக்கு உள்ள நபருக்கு தற்போது உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அந்த நபரின் உடல்நிலை சீராக உள்ளது; மருத்துவ விதிகள் காரணமாக நோயாளி குறித்த துல்லியத் தகவல்களை வெளியிடவில்லை.

பாதிப்பு அறிகுறிகள் தோன்றியபின் அவரோடு தொடர்பில் இருந்த 27 பேரை தனிமைப்படுத்தி தற்போது அவர்கள் அனைவரும் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார்கள். எனவே அதுகுறித்து யாரும் அச்சமடைய வேண்டாம்.

மத்திய அரசு மற்றும் உலக சுகாதார நிறுவன நிபுணர்களிடம் இருந்து நாங்கள் தினசரி தேவையான அறிவுரைகளை பெற்று செயலாற்றி வருகிறோம். முதல்வரும் இதுகுறித்து தேவையான ஆலோசனைகளை வழங்கி வருகிறார். 

கரோனா எதிரொலியால் தமிழகத்தில் முகக்கவசம் அணியும் நிலை ஏற்படவில்லை. நான்கூட இப்போது எதுவும் முகக்கவசம் அணியவில்லை. சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் அதற்குரிய பாதுகாப்பு உபகரணங்களை அணிந்தால் போதுமானது 

தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவுவதை 100% தடுத்து முழுமையான கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்

சீனாவில் கரோனா பரவியதில் இருந்தே இங்கு மருத்துவமனைகளில் தனி வார்டுகள் அமைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துவருகிறோம். எனவே அதுகுறித்து கவலை அடையத் தேவை இல்லை 

முக்கியமாக கரோனா தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளை எக்காரணம் கொண்டும் யாரும் நம்ப வேண்டாம்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT