தமிழ்நாடு

மகளிர் தினத்தை முன்னிட்டு உதய் எக்ஸ்பிரஸ் ரயிலை மகளிர் குழு இயக்கி சாதனை

8th Mar 2020 01:32 PM

ADVERTISEMENT

மகளிர் தினத்தை முன்னிட்டு உதய் எக்ஸ்பிரஸ் ஈரடுக்கு ரயில் முழுவதும் மகளிர் குழுவினரை கொண்டு இயக்கப்பட்டது.

மகளிர் தினத்தை முன்னிட்டு சேலம் ரயில்வே கோட்டத்தில் மார்ச் 1 ஆம் தேதி முதல் மார்ச் 10 வரை மகளிர் தின நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. அந்தவகையில் அனைவரும் சமம் என்ற வகையில், கோட்டத்தில் பணிபுரியும் மகளிர் சாதனையாளர்களை வெளிக்கொணரும் வகையில், எங்களை உத்வேகப்படுத்தும் மகளிர் என்பதை மையப்படுத்தி நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

மார்ச் 8 மகளிர் தினத்தை முன்னிட்டு வண்டி எண் 22666 கோவை-பெங்களூரு உதய் எக்ஸ்பிரஸ் ரயிலை மகளிர் குழுவினர் இயக்கி பெருமை சேர்க்கப்பட்டது. ரயில் என்ஜின் டிரைவர் நிம்மி, உதவி டிரைவர் பி.ஜே.சிந்து, ரயில் காவலர் எஸ்.மரீனா, முதன்மை பயணச்சீட்டு ஆய்வாளர்கள் மைதிலி, பி.ஆர்.சாவித்ரி, பயணச்சீட்டு சோதனையாளர் தன்யா, ஹெலன், ஆர்.நந்தினி ஆகியோர் கொண்ட மகளிர் குழுவினரால் இயக்கப்பட்டது. இந்த ரயில் கோவையில் இருந்து சேலம் ரயில் நிலையத்திற்கு காலை 7.50 மணிக்கு வந்தது. 

அப்போது சேலம் ரயில்வே கோட்டத்தின் கூடுதல் மேலாளர் ஏ.அண்ணாதுரை, முதுநிலை வணிக மேலாளர் இ.ஹரிகிருஷ்மன், முதுநிலை நிதி மேலாளர் உமா மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அதிகாரிகள் குழுவினர் உதய் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்கி வந்த மகளிர் குழுவை வரவேற்று, இனிப்பு வழங்கி கெளரவப்படுத்தினர். பயணிகள், ரயில்வே பணியாளர்கள், ரயில்வே பாதுகாப்பு பணியாளர்கள் உள்ளிட்டோர் மகளிர் குழுவினருக்கு மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து பாராட்டினர். தெற்கு ரயில்வேயில் சேலம் ரயில்வே கோட்டத்தில் சுமார் 1131 பெண் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். 

ADVERTISEMENT

ரயில் என்ஜின் டிரைவர்கள் 74, காப்பாளர்கள் 4, ரயில் நிலைய மேலாளர்கள் 19, இயக்க உதவியாளர்கள் 129, பொறியியல் துறையில் 294, மெக்கானிக்கல் பிரிவில் 125, பணியாளர் பிரிவில் 26, கணக்கு பிரிவில் 10, பாதுகாப்புப் பிரிவில் 13, ரயில் தண்டவாள பராமரிப்பில் 10, மருத்துவத்துறையில் 71, சிக்னல் அன்ட் தொலைதொடர்பு 37, முன்பதிவு மற்றும் பயணச்சீட்டு சோதனையாளர்கள் 153 பேர் என பெண் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். சேலம் கோட்டத்தில் கோவை ரயில் நிலையத்தில் பெண்கள் உதவி மையம், தாய்மார்கள் குழந்தைகளுக்கு பால் புகட்டும் அறைகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. 

உதய் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணச்சீட்டு சோதனையில் ஈடுபட்டுள்ள மகளிர் குழுவினரின் பணியை அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது.

Tags : uday express
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT