தமிழ்நாடு

திருப்பூரில் ரூ.336 கோடியில் மருத்துவக் கல்லூரிக்கான கால்கோள் விழா: அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தொடக்கிவைத்தார்

8th Mar 2020 10:06 AM

ADVERTISEMENT

திருப்பூரில் ரூ.336.96 கோடி மதிப்பிலான புதிய மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா மேடைக்கான கால்கோள் விழாவை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்தார்.

திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் புதிய மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டுவதற்காக தமிழக அரசு ரூ.336.96 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 15) நடைபெறுகிறது. இந்த நிலையில், அரசு மருத்துவக் கல்லூரிக்கான கால்கோள் விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தலைமை வகித்தார். இதில், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற அவர் பேசியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்காக நிதி ஒதுக்கீடு செய்துள்ள தமிழக முதல்வருக்கு மக்கள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகள். இதில் மருத்துவமனைக்காக ரூ.124.74 கோடி மதிப்பீட்டில் 4 கட்டடங்களும், கல்லூரிக்காக ரூ.107.21 கோடி மதிப்பீட்டில் 2 கட்டடங்களும், குடியிருப்புகளுக்காக ரூ.104 கோடி மதிப்பீட்டில் 21 கட்டடங்கள் ரூ.336.96 மதிப்பீட்டில் கட்டப்படவுள்ளது.

இதில் உடற்பயிற்சி கூடம், கலையரங்கம் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், மின்தூக்கி மற்றும் சூரிய ஒளி மின்சார வசதி மற்றும் மழைநீர் சேகரிப்பு வசதி உள்ளிட்ட அனைத்து வசதிளுடன் சிறப்பான முறையில் அமையவுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது. இந்த முகாம்களை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கிராமப்பகுதிகளுக்கு அம்மா ஆம்புலன்ஸ் மூலமாகக்கூட சென்று கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இந்தியாவில் முட்டை உற்பத்தியில் நாமக்கல் மாவட்டம்தான் முதலிடம் வகிக்கிறது. அதே போல், கறிக்கோழி உற்பத்தியிலும் கொங்கு மண்டலம் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில், கடந்த சில நாள்களாக கரோனா வைரஸ் பரவுவதாக சிலர் வதந்தியைப் பரப்பிக் கொண்டுள்ளார்கள். சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அனைத்து அதிகாரிகளிடமும் கலந்து பேசியுள்ளோம். இந்தக் கறிக்கோழிகளினால் எந்தவிதமான பாதிப்பும் இல்லை. ஆகவே மக்கள் அச்சப்படத்தேவையில்லை என்றார்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன், முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் திரு.சு.குணசேகரன் (திருப்பூர் தெற்கு), கரைப்புதூர் ஏ.நடராஜன் (பல்லடம்), கே.என்.விஜயகுமார் (திருப்பூர் வடக்கு), உ.தனியரசு (காங்கயம்), மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சத்தியபாமா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல், மாநகர காவல் துணை ஆணையர் பத்ரிநாராயணன் , மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.சுகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெ.ரூபன்சங்கர்ராஜ், திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் கவிதா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் தவமணி, ரவி, திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் வள்ளி, பொதுசுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் சாந்தி, துணை இயக்குநர் ஜெகதீஸ்குமார், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

Tags : Tirupur medical college
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT