தமிழ்நாடு

கும்பகோணத்தில் சிவன், பெருமாள் கோயில்களில் மாசி மக விழா: மகாமக குளத்தில் தீர்த்தவாரி

8th Mar 2020 06:00 PM

ADVERTISEMENT

 

கும்பகோணம்: கும்பகோணத்தில் உள்ள 12 சிவன் கோயில்கள் மற்றும் 5 பெருமாள் கோயில்களில் மாசி மக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆண்டுதோறும் மாசி மாத மக நட்சத்திரத்தன்று மாசி மக விழா கொண்டாடப்படுவது வழக்கம். இதுவே, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக விழாவாகக் கொண்டாடப்படுகிறது. கும்பகோணத்தில் மகாமகம் தொடர்புடைய 12 சிவன் கோயில்களிலும், 5 பெருமாள் கோயில்களிலும் மாசி மக விழா கொண்டாடப்படுவது வழக்கம்.

இதன்படி மகாமகத்துடன் தொடர்புடைய ஆதிகும்பேசுவரர் கோயில், காசி விசுவநாதர் கோயில், காளகஸ்தீசுவரர் கோயில், அபிமுகேசுவரர் கோயில், சோமேசுவரர் கோயில், கெüதமேசுவரர் கோயில் ஆகியவற்றில் பிப். 28 - ம் தேதியும், இதேபோல, சக்கரபாணி கோயில், ராஜகோபாலசுவாமி கோயில், ஆதிவராக பெருமாள் கோயில் ஆகியவற்றில் பிப். 29-ம் தேதியும் மாசி மக விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இக்கோயில்களில் தொடர்ந்து நாள்தோறும் புறப்பாடு, தேரோட்டம் உள்ளிட்ட வைபவங்கள் நடைபெற்றன.

ADVERTISEMENT

மாசி மக நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் மகாமக குளத்தில் புனித நீராடி வருகின்றனர். பிற்பகல் 12.30 மணிக்கு ஆதிகும்பேசுவரர், காசி விசுவநாதர், அபிமுகேசுவரர், கௌதமேசுவரர், பாணபுரீசுவரர், அமிர்தகலசநாதர், கம்பட்ட விசுவநாதர், கோடீசுவரர், ஏகாம்பரேசுவரர், நாகேசுவரர், சோமேசுவரர், காளஹஸ்தீசுவரர் ஆகிய 12 கோயில்களிலும் சுவாமி - அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பட்டு, மகாமக குளத்தின் நான்கு கரைகளிலும் எழுந்தருளினர்.

பின்னர் அந்தந்த கோயிலின் அஸ்திரதேவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அஸ்திரதேவர்கள் மகாமக குளத்தில் நீராடியதைத் தொடர்ந்து நான்கு கரைகளிலும், குளத்திலும் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். 

சக்கரபாணி கோயில் தேரோட்டம்:

மாசிமகத்தையொட்டி, சக்கரபாணி கோயிலில் சுதர்சனவல்லி, விஜயவல்லி தாயாருடன் சக்கரபாணி சுவாமி இன்று காலை புறப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். பின்னர், ஏராளமான பக்தர்கள் சக்கரராஜா என்ற முழக்கங்களை எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர். மாலையில் காவிரியாற்றின் சக்கரப் படித்துறையில் சக்கரராஜா தீர்த்தவாரி நடைபெறவுள்ளது.  

இதேபோல, பொற்றாமரைக் குளத்தில் சாரங்கபாணி கோயில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. தெப்பத்தில் உபயநாச்சியாருடன் சாரங்கபாணி சுவாமி எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஆதிவாரக பெருமாள் கோயில் வராக குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT