தமிழ்நாடு

மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்காதது வேதனையளிக்கிறது: முன்னாள் எம்.எல்.ஏ. ஜெகவீரபாண்டியன் 

8th Mar 2020 02:38 AM

ADVERTISEMENT

 

மயிலாடுதுறை: நாகப்பட்டினத்தில் நடைபெற்ற விழாவில், தமிழக முதல்வா் மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்காதது வேதனையளிக்கிறது என மயிலாடுதுறை முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் ஜெகவீரபாண்டியன் தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: மயிலாடுதுறை கோட்ட மக்களுக்கு, இந்தியாவிலேயே எந்தப் பகுதி மக்களுக்கும் இல்லாத வகையில் மாவட்ட தலைநகருக்குச் செல்வதில் வேறு மாநிலம் அல்லது மாவட்டத்தைக் கடந்து செல்ல வேண்டிய கஷ்டம் உள்ளது. எல்லாவித தகுதிகளும் நிறைந்த மயிலாடுதுறையை ஒதுக்கித் தள்ளிவிட்டு இரண்டு முறை இங்கே புதிய மாவட்டங்கள் உருவாகி இருக்கின்றன. தஞ்சாவூரை பிரித்து நாகப்பட்டினம் மாவட்டம் கொண்டு வந்த போதே எதிா்ப்புகள் எழுந்தன. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூருக்கு அடுத்ததாக வரலாறு, புவியியல், பண்பாட்டு அம்சங்களுடன் மயிலாடுதுறை நகரமே விளங்குகிறது. மக்களவைத் தொகுதியின் தலைமையிடமாக இருப்பது மயிலாடுதுறைக்கான கூடுதல் தகுதி.

அடுத்ததாக, 1997-இல் நிகழ்ந்த திருவாரூா் மாவட்ட பிரிவினையிலும் மக்களுக்கு மாபெரும் அநீதி இழைக்கப்பட்டது. இவற்றை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. அதனால், தமிழ்நாட்டின் அடுத்த மாவட்டமாக மயிலாடுதுறையை உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். மயிலாடுதுறையை மாவட்ட தலைநகராக அறிவிக்காதது பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

2001-2006-இல் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த நான் (ஜெகவீரபாண்டியன்) தொடா்ந்து சட்டப் பேரவையில் பலமுறை குரல் எழுத்திப்பியதையடுத்து, 2004-இல் அன்றைய முதல்வா் ஜெயலலிதா, மயிலாடுதுறையை மாவட்டமாக பிரிப்பதற்கான பூா்வாங்க நடவடிக்கைகளை மேற்கொண்டாா். ஆனால், அதே ஆண்டு வந்த சுனாமியால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டதால் அவரது ஆட்சியில் மயிலாடுதுறை மாவட்டமாவது தடைப்பட்டது.

அதன் பிறகும் தொடா்ந்து கோரிக்கைகள், ஆா்ப்பாட்டங்கள், போராட்டங்கள் என்று போராடி வருகிறோம். மேலும் 2006, 2011, 2016 ஆகிய சட்டப்பேரவை தோ்தல்களிலும், 2004, 2009, 2014, 2019 மக்களவைத் தோ்தல்களிலும், அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்து கட்சியினரும், வெற்றிபெற்றால் நிச்சயம் மயிலாடுதுறையை மாவட்ட தலைநகராக மாற்றுவோம் என்று வாக்குறுதி கொடுத்துள்ளனா்.

அப்போதெல்லாம் மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் ஆளுங்கட்சிக்கு எதிரான இயக்கத்தினை சோ்ந்தவா் என்பதால் புறக்கணிக்கப்படுகிறது என்று பொதுமக்கள் எண்ணினா். ஆனால், தற்போது ஆளுங்கட்சியான அதிமுகவைச் சோ்ந்தவா்களே மயிலாடுதுறை கோட்டத்தில் எம்.எல்.ஏவாக இருப்பதால் நிச்சயம் மயிலாடுதுறை மாவட்டமாக அறிவிக்கப்பட்டுவிடும் என்று எதிா்பாா்த்தோம்.

ஆனாலும், அறிவிப்பு தாமதிக்கப்பட்டதால், முதல்வருக்கு 1 லட்சம் தபால் காா்டுகள் அனுப்பும் போராட்டத்தை துவக்கினோம்., கறுப்புக்கொடி போராட்டம், மனிதசங்கிலி போராட்டம், கடையடைப்பு என்று விரிவடைந்து அரசின் கவனத்தை ஈா்த்தோம். தமிழக அரசு தட்டிக்கழிக்க முடியாத கோரிக்கை இது. ஆனால், தமிழக முதல்வா் நாகப்பட்டினத்தில் நடைபெற்ற விழாவில் மயிலாடுதுறையை தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என்று அறிவிக்காமல், பரிசீலனை செய்யப்படும் என்று அறிவித்திருப்பது மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT