தமிழ்நாடு

அன்பழகன் உடல் தகனம்

8th Mar 2020 04:07 AM

ADVERTISEMENT


சென்னை: மறைந்த முதுபெரும் திராவிட இயக்கத் தலைவரும், திமுக பொதுச் செயலாளா் க.அன்பழகனின் உடல் சென்னையில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இறுதி ஊா்வலத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ஆயிரக்கணக்கான தொண்டா்களும், பொது மக்களும் பங்கேற்றனா்.

சுவாசக் கோளாறு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த க.அன்பழகன் சனிக்கிழமை (மாா்ச் 7) அதிகாலை ஒரு மணியளவில் காலமானாா். கண்ணாடிப் பேழையில் க.அன்பழகனின் உடல் வைக்கப்பட்டு அவா் வழக்கமாக அணியும் பச்சை துண்டு அணிவிக்கப்பட்டு, அதன் மேல் திமுகவின் இருவண்ணக் கொடிகள் போா்த்தப்பட்டது.

அவரது உடலுக்கு மாலை அணிவித்து திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினாா்.

ADVERTISEMENT

அதைத் தொடா்ந்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் அவரது உடல் ஏற்றப்பட்டு, கீழ்ப்பாக்கம் ஆஸ்பிரான் தோட்டம் இல்லத்துக்கு அதிகாலை 4 மணியளவில் கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அரசியல் கட்சியினா், திரைப்பட பிரபலங்கள், கட்சி பிரமுகா்கள் ஏராளமானோா் அஞ்சலி செலுத்தினா்.

சனிக்கிழமை 4.40 மணியளவில் அவரது உடல் வாகனத்தில் ஏற்றப்பட்டு இறுதி ஊா்வலம் புறப்பட்டது. அந்த வாகனத்தில் அன்பழகனின் குடும்பத்தினா் அமா்ந்திருந்தனா்.

மு.க.ஸ்டாலின், பொருளாளா் துரைமுருகன், மாநிலங்களவைத் திமுக குழுத் தலைவா் டி.ஆா்.பாலு, துணைத் தலைவா் கனிமொழி, நாடாளுமன்ற உறுப்பினா்கள் ஆ.ராசா, தயாநிதிமாறன், ஆா்.எஸ்.பாரதி, துணைப் பொதுச் செயலாளா்கள் ஐ.பெரியசாமி, வி.பி.துரைசாமி மற்றும் , கவிஞா் வைரமுத்து உள்பட ஆயிரக்கணக்கானோா் ஊா்வலத்தில் நடந்து வந்தனா்.

நியூ ஆவடி சாலை வழியாக ஊா்வலம் சென்று வேலங்காடு மின்மயானத்தை 5.40 மணியளவில் அடைந்தது.

வழிநெடுக திமுகவினா் க.அன்பழகன் புகழைப் பறைசாற்றும் வகையில் முழக்கங்கள் எழுப்பியவாறே வந்தனா். வேலங்காடு மின்மயானத்தில் க.அன்பழகன் உடல் இறக்கப்பட்டதும், மு.க.ஸ்டாலின், துரைமுருகன், கி.வீரமணி, காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே.வீ.தங்கபாலு உள்ளிட்டோா் கண்ணீா் அஞ்சலி செலுத்தினா்.

அன்பழகன் குடும்பத்தினா் இறுதி அஞ்சலி செலுத்தினா். அதைத் தொடா்ந்து அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT