மாசிமகத்தையொட்டி கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேசுவரர் திருக்கோயிலில் தேரோட்டத் திருவிழா இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஆண்டுதோறும் இக்கோயிலில் மாசி மாதத்தில் தேரோட்டத் திருவிழா விமரிசையாக நடைபெறும். அதன்படி, இந்தாண்டுக்கான மாசிமக விழா பிப்ரவரி 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதைத்தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணிக்கு விநாயகர், சுப்பிரமணியர் தேரோட்டமும், காலை 8.30 மணிக்கு சுவாமி, அம்பாள் தேரோட்டமும் ஒன்றன்பின் ஒன்றாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு இத்தேர்களை வடம் பிடித்து இழுத்தனர்.
இதைத் தொடர்ந்து நாளை (7-ம் தேதி) இரவு சண்டிகேஸ்வரர் தேரோட்டம் நடைபெறுகிறது. வருகிற 8-ம் தேதி காலை 9 மணிக்கு விநாயகர், சுப்பிரமணியர் உள்ளிட்ட பஞ்சமூர்த்தி சுவாமிகள் விதி உலா, மகாமக குளக்கரையில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. காலை 10.15 மணி முதல் 11.45 மணி வரை மகாமக குளத்தில் தீர்த்தவாரி நடைபெறவுள்ளது.