தமிழ்நாடு

உலகளவில் 7.5 கோடி பேருக்கு கண்நீர் அழுத்த நோய் பாதிப்பு: கண் மருத்துவர் தகவல்

6th Mar 2020 08:34 PM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி: உலகளவில் 7.5 கோடி பேர் கண்நீர் அழுத்த நோயினால் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர் என்றார் திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஆர்.ராமகிருஷ்ணன்.

திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் வெள்ளிக்கிழமை கூறியது:

உலக அளவில் நிரந்தர பார்வை இழப்புக்கு இரண்டாவது முக்கிய காரணியாக கண்நீர் அழுத்த நோய் உள்ளது. இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வித அறிகுறியுமின்றி தாங்கள் அறியாமலேயே தங்கள் பார்வையை இழக்க நேரிடும். உலக அளவில் 7.5 கோடி மக்கள் கண்நீர் அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். இந்நோயால் 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வை இழந்துள்ளனர். இந்தியாவில் மட்டும் 1.6 கோடி பேர் இந்த நோய்க்கு ஆளாகியுள்ளனர். இது ஒரு பரம்பரை நோயாகும். குடும்பத்தில் யாருக்கேனும் இந்த நோய் இருந்தால் அவர்களது முதல் நிலை ரத்த சம்பந்தப்பட்ட உறவினர்களுக்கு அதாவது (அண்ணன், தம்பி, அக்கா,தங்கை) இந்நோய் அதிகம் வர வாய்ப்புள்ளது. இந்நோய் வந்தவர்கள் பார்வையிழப்பைத் தடுக்க சிகிச்சை எடுக்க வேண்டும். கண் நரம்பின் தோற்றம், பக்கப் பார்வை முதலியவற்றை பரிசோதனை செய்தல் அவசியம்.

ADVERTISEMENT

கண்நீர் அழுத்த நோய் சிறு குழந்தைகள் முதல் இளைஞர்களையும் பாதிக்கும். 40 வயதிற்கு மேற்பட்டவர்கள், சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள், கண்நீர் அழுத்த நோய் உள்ளவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், கிட்டப்பார்வை, ஒற்றை தலைவலி, ஸ்டீராய்டு வகை மருந்துகளை தொடர்ந்து அதிக நாள் உள்ளவர்களுக்கு இந்நோய் வர அதிக வாய்ப்புள்ளது.

கண்புரை முற்றிய நிலை, கண்ணில் அடிபடுதல், கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்களுக்கு இந்த நோய் வர அதிக வாய்ப்புள்ளது. கண்நீர் அழுத்த நோய்கள் பல வகைப்படும். அதில் முக்கியமானது திறந்த கோண வகையாகும். இந்த நோய் உள்ளவர்கள் தங்களை அறியாமலேயே பார்வையை இழந்து கொண்டிருப்பார்கள். எந்தவிதமான அறிகுறியும் இருக்காது. ஆதலால், இதை அமைதிப் பார்வைத் திருடன் என்று கூறுவர்.

நவீன பரிசோதனை முறையின் மூலம் மட்டுமே இந்த நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும். கண்நீர் அழுத்த நோய்க்கு நிரந்தர குணம் கிடையாது. மருந்து, லேசர், அறுவைச்சிகிச்சை மூலம் பார்வையிழப்பைக் கட்டுப்படுத்த மட்டுமே முடியும். தவிர இழந்த பார்வையைத் திரும்பக் கொண்டு வர முடியாது.  ஆகவே, கண்நீர் அழுத்த நோய் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டியது அவசியம் என்றார். பேட்டியின்போது கண் மருத்துவர்கள் மீனாட்சி, மொஹிதீன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT