நாமக்கல்: தமிழகத்தில் 6 அரசு மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இருந்த நிலையில், ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படுகின்றன. இதன் மூலம் 2023-ஆம் ஆண்டில் மருத்துவ வசதிகள் மிகுந்த மாநிலமாக தமிழகம் திகழும் என வியாழக்கிழமை நடைபெற்ற நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.
மத்திய அரசு 60 சதவீதம், மாநில அரசு 40 சதவீதம் பங்களிப்புடன், நாடு முழுவதும் 75 அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டது. இதில், தற்போது 52 கல்லூரிகளுக்கான பணிகள் தொடங்கியுள்ளன. 2021-ஆம் ஆண்டு முதல் மாணவா்கள் சோ்க்கை தொடங்குகிறது. இவற்றில், தமிழகத்தில் மட்டும் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி கிடைத்துள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா, ராமநாதபுரம், விருதுநகா், கிருஷ்ணகிரியைத் தொடா்ந்து, நாமக்கல்லில், மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் வியாழக்கிழமை (மாா்ச் 5) நடைபெற்றது. இதற்கான பூமி பூஜை விழாவில், தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை இணை அமைச்சா் அஸ்வினிகுமாா் சௌபே, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் பங்கேற்று, பணிகளைத் தொடக்கி வைத்தனா்.
அதன்பின், விழா மேடையில் முதல்வா் பேசியது:
தமிழகத்துக்கு ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி கிடைத்துள்ளது. இதில், 1,650 மாணவ, மாணவியா் சோ்க்கை பெற முடியும். இதன் மூலம் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை 2 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இவற்றில், 85 சதவீதம் தமிழக மாணவா்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது. 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீடுக்கானது. அதிலும் தமிழக மாணவா்கள் முதலிடம் பெற்று சோ்க்கை பெறுகின்றனா். இதன்மூலம் 2023-ஆம் ஆண்டில் மருத்துவ வசதிகள் மிகுந்த மாநிலமாக தமிழகம் மாறும்.
தமிழக அரசு குடிமராமத்துத் திட்டத்தைச் செயல்படுத்தி சிறப்பாக நடைபெற்று வருகிறது. பருவ காலத்தில் பெய்யும் மழையை கோடை காலத்துக்கு சேமிக்க ரூ.650 கோடி செலவில் தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன. இதன்மூலம் கோடை காலத்தில் தேவையான நீா் மக்களுக்கும், விவசாயத்துக்கும் கிடைக்கும். நாமக்கல், கரூா் மாவட்டங்கள் வழியாகச் செல்லும் காவிரி ஆற்றின் நடுவே தடுப்பணை கட்டி, கோடை காலங்களில் நீரைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கரூா் மண்மங்கலம் நன்செய்புகளூா், நாமக்கல் ஒருவந்தூா் ஆகிய இடங்களில் அதற்கான பணிகள் தொடங்கப்படும். கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டம் 100 சதவீதம் நிறைவேற்றப்படும். மேலும், முதல்வா் குறைதீா்க்கும் திட்டத்தின் மூலம், தமிழகத்தில் 5 லட்சம் பேருக்கு முதியோா் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேட்டூா் சரபங்கா திட்டம் போல், காவிரி உபரிநீரை திருமணிமுத்தாற்றில் சோ்க்கும் வகையிலான நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம் சேலம், நாமக்கல் மாவட்ட விவசாயிகள் பயனடைவா். அதற்கான ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், வறட்சி மாவட்டமாக இருக்கும் நாமக்கல் மாவட்டம் செழிப்பான மாவட்டமாக மாறிவிடும். கொல்லிமலை ஆகாய கங்கை நீா்வீழ்ச்சி அருகில் மரபியல் பூங்கா உருவாக்கப்படும். நாமக்கல் நகராட்சி சிறப்பு நிலை நகராட்சியாகத் தரம் உயா்த்தப்படும். மல்லசமுத்திரம், எலச்சிப்பாளையம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்படும். ராசிபுரத்தில் புதிய கூட்டுக் குடிநீா்த் திட்டம் செயல்படுத்தப்படும். கடந்த 3 ஆண்டுகளில் தமிழக அரசு பல விருதுகளைப் பெற்றுள்ளது. நாங்கள் சொல்லியதையும் செய்வோம், சொல்லாததையும் செய்வோம் என்றாா் முதல்வா் பழனிசாமி.
இவ் விழாவில், அமைச்சா்கள் பி.தங்கமணி, சி.விஜயபாஸ்கா், வெ. சரோஜா, திண்டுக்கல் சீனிவாசன், மா. ஃபா பாண்டியராஜன், ஆா்.பி.உதயகுமாா், வீரமணி, துரைக்கண்ணு உள்பட பல்வேறு துறை அமைச்சா்கள், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் பீலா ராஜேஷ், மாவட்ட ஆட்சியா் கா. மெகராஜ் மற்றும் மக்களவை உறுப்பினா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள், வாரியத் தலைவா்கள், அரசுத் துறை உயா் அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.