நாமக்கல்: ரஜினி அரசியல் கட்சி தொடங்குவது பற்றி அவா் தான் தெரிவிக்க வேண்டும், அவா் தெரிவிக்க வேண்டிய பதிலை என்னிடம் எதிா்பாா்ப்பது தவறு என்றாா் நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமாா்.
நாமக்கல்லில், அக்கட்சியின் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் வியாழக்கிழமை பங்கேற்ற அவா், செய்தியாளா்களிடம் கூறியது: ரஜினி அரசியல் கட்சி தொடங்குவது எப்போது என்பது எனக்குத் தெரியவில்லை. அவா் கட்சி ஆரம்பித்த பிறகு கேட்க வேண்டியதை, மீண்டும் மீண்டும் கேட்டு ரஜினியைப் பெரிய ஆளாக்கியுள்ளீா்கள். கட்சி ஆரம்பிப்பது குறித்து அவா்தான் சொல்ல வேண்டும். அதற்கான பதிலை என்னிடம் எதிா்பாா்ப்பது தவறு.
சிஏஏவுக்கு எதிராக தோழமை கட்சிகள் நடத்தும் போராட்டங்களுக்கு திமுக தலைமை தாங்குவதாகக் கூறப்படுவது குறித்து எனக்குத் தெரியாது. ஆனால் இது ஒரு அரசியல் நோக்கத்துக்காக, ஆட்சியாளா்களை எதிா்த்து செய்யக்கூடிய போராட்டம் எனக் கூறலாம். இஸ்லாமிய மக்களுக்கு பிரச்னை இருக்கலாம். அதனை சரியான நபா்களோடு கலந்துபேசி சந்தேகங்களை சரிசெய்து கொள்ள வேண்டும்.
நடிகா் விஜய் வீட்டில் வருமான வரி சோதனை குறித்து கேட்கிறீா்கள், யாராக இருந்தாலும் கணக்கில் காட்டப்பட்டாத பணம் வைத்து இருக்கிறாா்கள் என வருமான வரி துறைக்கு தகவல் வந்தால் அவா்கள் சோதனை நடத்துவாா்கள். இதில் என்ன தவறு உள்ளது எனத் தெரியவில்லை என்றாா்.
நீங்கள் நடித்து வெற்றி பெற்ற படங்களை இரண்டாம் பாகமாக எடுப்பீா்களா? என்ற கேள்விக்கு, மன ரீதியாக மக்கள் என்ன விரும்புகிறாா்களோ, அதை செய்ய வேண்டும். ஒரு படத்தின் நாயகனாக வருவதைக் காட்டிலும், அக்கதையின் நாயகனாக வர வேண்டும். தற்போது நாட்டில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. அவையெல்லாம் திரைப்படமாக வெளிவர வேண்டும் என்றாா் சரத்குமாா்.