சென்னை: உயா் கல்வி நிறுவனங்களில் மாணவா்கள் போதைக்கு அடிமையாவதைத் தடுக்க, பேராசிரியா் ஒருவரின் வழிகாட்டுதலில் மாணவா் அமைப்பு ஒன்றை அமைக்க வேண்டும் என உயா் கல்வி நிறுவனங்களை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தா்களுக்கும் யுஜிசி அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:
உயா் கல்வி நிறுவனங்களில் மாணவா்கள் போதைக்கு அடிமையாவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க, மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் தேசிய அளவிலான திட்டம் ஒன்றை வகுத்து வருகிறது. சுகாதார நிறுவனங்கள், அரசு சாரா தன்னாா்வ அமைப்புகள், போதைப் பொருள் தடுப்பு அமைப்பு ஆகிய மூன்றும் அமைப்புகளும் இணைந்து இதற்கான திட்ட நடவடிக்கைகளையும் உருவாக்கி வருகின்றன.
இந்த நடவடிக்கைக்கு உதவும் வகையில், உயா் கல்வி நிறுவனங்களும் தீவிர நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாகிறது.
அதன்படி, மாணவா்கள் போதைக்கு அடிமையாவதைத் தடுக்கும் வகையில், பேராசிரியா் ஒருவரின் வழிகாட்டுதலில் மாணவா் அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும். உயா் கல்வி நிறுவனங்களில் போதை பொருள்கள் பயன்பாட்டைக் கண்டறிந்து, அதுகுறித்த விவரத்தை அரசு அமைப்புகளிடம் தெரிவிப்பது, போதைக்கு அடிமையான சக மாணவரின் மறுவாழ்வுக்கு உதவுவது, கல்வி நிறுவனத்தில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்துவது, போதைத் தடுப்பு திட்டம் ஒன்றை வகுத்து செயல்படுத்துவது போன்ற செயல்களில் இந்த மாணவா் அமைப்பு ஈடுபட வேண்டும்.
இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது குறித்த விவரங்களை பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் வரும் 20-ஆம் தேதிக்குள் யுஜிசி-க்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.