தமிழ்நாடு

நுகர்வோரிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மின் வாரியம்: மாதந்தோறும் கணக்கெடுக்க வலியுறுத்தல்

2nd Mar 2020 05:48 AM | - வெ.செல்வகுமார்

ADVERTISEMENT


கோவை: மின்சார வாரியத்தினர் நுகர்வோரிடம் 20 முதல் 30 சதவீதம் வரை கூடுதலாக மின் கட்டணம் வசூலிப்பதாகப் புகார் எழுந்துள்ளது. 

கோவை மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மின்வாரிய அலுவலகங்கள் உள்ளன. வீடுகள், வணிக கட்டடங்களில் 2 மாதங்களுக்கு ஒருமுறை மின் நுகர்வுக் கணக்கெடுப்பு செய்து, கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. 100 யூனிட்டுக்குக் கீழ் மின்சாரம் பயன்படுத்தும் மக்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது. இந்நிலையில் 2 மாதங்களுக்கு ஒரு முறை செலுத்தும் மின்சாரக் கட்டணத்தில் 20 முதல் 30 சதவீதம் வரை மக்களிடம், மின்வாரியம் கூடுதலாக வசூலிப்பதாகப் புகார் எழுந்துள்ளது. 

இதுதொடர்பாக, கோயம்புத்தூர் சிட்டிசன் வாய்ஸ் அமைப்பின் தலைவர் சி.எம்.ஜெயராமன் கூறியதாவது:

மின்சார வாரியத்தில் மாதந்தோறும் நடைபெற்று வந்த மின் நுகர்வுக் கணக்கெடுப்புப் பணியானது, ஆள் பற்றாக்குறை, நிர்வாகச் சிக்கல் உள்ளிட்ட காரணங்களால் 2 மாதங்களுக்கு ஒரு முறை என மாற்றப்பட்டது. இதில், முதல் மாதம், இரண்டாம் மாதம் என இரு மாதங்களுக்கான பயன்பாட்டு மின்சாரத்தின் அளவைக் கணக்கெடுத்த பிறகு, அதை இரண்டால் வகுத்து, அந்தந்த பயன்பாட்டு யூனிட்டுகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விகிதப்படி கட்டணம் வசூலிக்க வேண்டும். 

ADVERTISEMENT

ஆனால், மின் வாரியங்களில் 2 மாதங்களுக்கும் சேர்த்து பயன்படுத்தப்பட்ட மொத்த மின் அளவீடையும் கணக்கிட்டு, கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. இதனால், நுகர்வோரிடமிருந்து 20 முதல் 30 சதவீதம் வரை மின் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.

உதாரணமாக, ஒரு வீட்டின் மாத மின்சார உபயோகம் 400 யூனிட் என்றால், 2 மாதங்களுக்கு கணக்கிடும்போது 800 யூனிட்  என கணக்கிடுகின்றனர். இதில், 800 யூனிட் மின் உபயோக அளவை இரண்டால் வகுத்து 400 யூனிட் கட்டண விகிதங்களில், யூனிட்டுக்கு ரூ.3 என நிர்ணயித்து வசூலிக்க வேண்டும். ஆனால், மின் வாரிய அலுவலகங்களில் 800 யூனிட் கட்டண விகிதப்படி யூனிட்டுக்கு ரூ. 4.60 வீதத்தில் கட்டணம் நிர்ணயித்து வசூலிக்கின்றனர்.

இதேபோல,  1, 000 யூனிட் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு, அவற்றை இரண்டு 500 யூனிட்டுகளாகப் பிரித்து  யூனிட்டுக்கு ரூ.4.50 கட்டணம் நிர்ணயித்து வசூலிக்க வேண்டும். ஆனால், 1,000 யூனிட்டுக்கு உண்டான கட்டண விகிதப்படி, ஒரு யூனிட்டுக்கு ரூ.5.75 கட்டணம் நிர்ணயித்து வசூலிக்கின்றனர். அதனால் 20 முதல் 30 சதவீதம் வரை மக்கள் கூடுதலாக மின் கட்டணம் செலுத்தி வருகின்றனர்.

இதனால் வீடுகளில் வசிப்பவர்களுக்கு 2 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.150 வரையும், தொழிற்சாலைகள், வணிக அமைப்புகளுக்கு ரூ.500 வரை மின்சாரக் கட்டணம் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பழைய முறைப்படி மாதந்தோறும் மின்சார பயன்பாட்டு அளவைக் கணக்கிட்டு, கட்டணம் விதிக்கும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.

 மின் கட்டணம் செலுத்தத் தவறுபவர்களின் மின் இணைப்பு 18 நாள்களில் துண்டிக்கப்படுகிறது. மின் இணைப்பு பெறுவோரின் 3 மாத வைப்புத் தொகையானது, மின்வாரிய அலுவலகத்தில் இருக்கும் நிலையில், அவர்களுக்கு முதலில் குறுந்தகவல்கள் அனுப்பி எச்சரிக்கலாம். இரண்டாம் கட்டமாக  அபராதத் தொகை செலுத்த நிர்பந்திக்கலாம். இரண்டையும் அலட்சியம் செய்யும்பட்சத்தில் கடைசி நடவடிக்கையாக சம்பந்தப்பட்ட நுகர்வோரின் மின் இணைப்பைத் துண்டிக்கலாம்.

 மின்வாரிய அலுவலகங்களில் "ஸ்வைப்பிங்' இயந்திரங்கள் மூலம் ஏ.டி.எம். அட்டை, கடன் அட்டைகளில் மின் கட்டணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். அதேபோல நகரின் முக்கியச் சந்திப்புகளில் சாலைகளின் இருபுறங்களுக்குச் செல்லும் மின் ஒயர்கள் பிடிமானமின்றிக் காணப்படுகின்றன. இவற்றை பாதுகாப்பான முறையில் இணைக்க வேண்டும் என்றார்.
 இதுதொடர்பாக, கோவை தெற்கு மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் ஸ்டாலின் பாபுவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: 
தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் ஒப்புதலோடு, சென்னை தலைமை மின்வாரிய அலுவலகத்தின் உத்தரவுப்படி, மாநிலம் முழுவதும் 2 மாதங்களுக்கு ஒருமுறை மின் பயனீட்டளவு கணக்கிடப்பட்டு, ஆணையம் நிர்ணயித்துள்ள விகிதத்தில் மின்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதில்லை. நுகர்வோர் தரப்பிலிருந்து இதுவரை புகார் ஏதும் வரவில்லை. கட்டண நிர்ணயம், கணக்கெடுப்பு முறையை மாற்றும் அதிகாரம் ஆணையத்துக்கு மட்டுமே உள்ளது என்றார்.


பிரித்துக் கணக்கிட்டால் மின்வாரியத்துக்கு நஷ்டம் ஏற்படும்


 மின்வாரிய அதிகாரி ஒருவர் இதுதொடர்பாக கூறியதாவது: 

 மின்சாரச் சட்டம் 2013-இன்படி, தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணைய சட்டத்தின் கீழ், மக்களின் மின்சார உபயோகத்துக்கு ஏற்றாற்போல, கட்டண விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2 மாதங்களுக்கு ஒருமுறை, மின்வாரியக் கணக்கீட்டாளர் மூலம் மின் பயன்பாடு துல்லியமாகக் கணக்கிடப்பட்டு, அதற்குரிய கட்டணத்தை பைசா அளவு அதிகமாக இல்லாமலும், குறையாமலும் கணினி  மூலமாக கட்டணம் கணக்கிடப்படுகிறது.

இவ்வாறு கணக்கிடப்படும் நிலையில் அதிக அளவு கட்டணம் வசூலிக்க வாய்ப்பில்லை. இரண்டு மாதங்களுக்கு மொத்தமாக உபயோகிக்கப்பட்ட மின்சாரத்தின் அளவை முதல் மாதத்துக்கு பாதியாகவும், இரண்டாம் மாதத்துக்கு பாதியாகவும் பிரித்து மின் கட்டணம் வசூலித்தால், மின்சார வாரியம் நஷ்டத்தில்தான் இயங்கும்.

இந்தக் கட்டண முறை புரியாதவர்கள்தான், மிகையான கட்டணத்தை மின்சார வாரியம் மக்களிடம் வசூலிப்பதாக புகார் செய்கின்றனர். மின்சாரச் சட்ட விதிகளின்படி கணக்கெடுப்புப் பணிகளும், கட்டண முறையும் முறையாகப் பின்பற்றப்பட்டு வருகிறது என்றார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT