தமிழ்நாடு

கோயிலுக்கு சீதனம் வழங்கிய முஸ்லிம்கள்

2nd Mar 2020 06:06 AM

ADVERTISEMENT

 

சத்தியமங்கலம்: தமிழகம் } கர்நாடக எல்லையில் அமைந்துள்ள தாளவாடி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு அப்பகுதியில் உள்ள 
முஸ்லிம்கள், பாரம்பரிய முறைப்படி சீதனம் வழங்கினர்.

ஈரோடு மாவட்டம், தாளவாடியில் மாரியம்மன் கோயிலையொட்டி முஸ்லிம்கள் வழிபடும் பெரிய பள்ளிவாசல் உள்ளது. பழைமையான மாரியம்மன் கோயிலில் கடந்த சில மாதங்களாக ராஜகோபுரம், விமான திருப்பணிகள் நடைபெற்றன. திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா, கணபதி பூஜையுடன் தொடங்கியது. 

இதைத்தொடர்ந்து கோயில் முன் அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் வேத விற்பன்னர்கள் யாக குண்டம் அமைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். ஞாயிற்றுக்கிழமை யாகசாலையில் இருந்து  புனித நீர் எடுத்து கோயில் கோபுரத்தில் உள்ள விமான கலசத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து புனித நீர் ஊற்றினர். கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. 

ADVERTISEMENT

இக்கோயில் விழாவுக்கு முஸ்லிம்கள் சீதனம் வழங்குவது பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இடையில் சில காலம் இந்த வழக்கம் நடைமுறையில் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, இஸ்லாமியர்கள் 30 பேர், அம்மனுக்கு சேலை, தேங்காய், பழம், இனிப்பு ஆகியவற்றை சீதனமாக வழங்கினர்.  அதேபோல, கோயில் நிர்வாகம் சார்பில் முஸ்லிம்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT