தமிழ்நாடு

கரும்பு விவசாயத்தை மீட்டெடுக்க எத்தனால் உற்பத்தியை ஊக்கப்படுத்த வேண்டும்: விவசாயிகள் எதிர்பார்ப்பு

2nd Mar 2020 05:46 AM

ADVERTISEMENT

 

விழுப்புரம்: தமிழகத்தில் நலிந்து வரும் கரும்பு விவசாயத்தையும், சர்க்கரை ஆலைகளையும் மீட்பதற்கு எத்தனால் உற்பத்தியை ஊக்கப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழகத்தில் கரும்பு பிரதானமாகப் பயிரிடப்படுகிறது. குறிப்பாக, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் அதிகளவில் கரும்பு பயிரிடப்படுகிறது. மகசூலில் போதிய வருவாய் கிடைக்காததாலும், சர்க்கரை ஆலைகளின் நிலுவைத் தொகை அலைக்கழிப்பாலும், கரும்பு சாகுபடியை கைவிடும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 2014-15-ஆம் ஆண்டில் 7 லட்சம் ஏக்கராக இருந்த கரும்பு சாகுபடி பரப்பு, நிகழாண்டு 3 லட்சம் ஏக்கராக குறைந்துள்ளது. அதேபோல, நாடு முழுவதும் கரும்பு பயிரிடும் பரப்பளவு பாதியளவாக குறைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

கரும்பு மகசூலும் ஏக்கருக்கு சராசரியாக 35 டன் அளவுக்கு குறைந்துள்ளது. சர்க்கரை கட்டுமானத்தின் அளவு 10.5 சதவீதத்திலிருந்து 8.5 சதவீதமாகக் குறைந்துள்ளது. கரும்பு பயிரிடும் பரப்பு குறைந்ததால், சர்க்கரை ஆலைகள் மூடப்பட்டு வருவதால், விவசாயிகள் மட்டுமல்லாது இதனை நம்பியுள்ள தொழிலாளர்கள் பலரும் வேலையிழந்து வருகின்றனர். கரும்பு பயிர் சாகுபடி வீழ்ச்சிக்கு சர்க்கரை தேவைக் குறைவும் காரணமாக சொல்லப்படுகிறது.  

சர்க்கரை தேவைக் குறைவு: நமது நாட்டில் சர்க்கரை தேவை ஆண்டுக்கு 2.5 கோடி டன்னாக குறிப்பிடப்படுகிறது. ஆனால், கரும்பு சர்க்கரை உற்பத்தி கடந்த 2014-15 -ஆம் ஆண்டிலிருந்து 3.5 கோடி டன் கையிருப்பாக உள்ளது. சர்க்கரை பயன்பாடு குறைந்து வருவதால், உற்பத்தி என்பது தேவைக்கும் அதிகமானதாக உள்ளது. சர்க்கரை நோய் பாதிப்பு பரவலான பிறகு சர்க்கரை பயன்பாட்டை மக்கள் குறைத்துவருகின்றனர்.

சர்க்கரை ஆலைகளில் ஒரு கிலோ சர்க்கரை உற்பத்தி செய்வதற்கு ரூ.30 வரை செலவாகிறதாம். ஆனால், உற்பத்தி செய்யப்படும் சர்க்கரையின் விலை அதிகபட்சமாக ரூ.35-க்கு அதாவது டன் ரூ.3,500 அளவில்தான் மொத்த சந்தையில் விற்பனையாகிறதாம். இதனால்,  சர்க்கரை ஆலை நிர்வாகத்தினர் போதிய லாபம், வருவாயின்றி தவிக்கும் நிலை உள்ளதாகக் கூறுகின்றனர்.

இது குறித்து விழுப்புரத்தைச் சேர்ந்த எஸ்.மனோகரன் உள்ளிட்ட முன்னோடி கரும்பு விவசாயிகள் கூறியதாவது: தமிழகத்தில் கரும்பு சாகுபடி பரப்பு குறைந்துள்ளதால், ஆலைகளைத் தொடர்ச்சியாக 4 மாதங்கள் இயக்குவதற்கு போதிய கரும்பு கிடைக்காத சூழல் உள்ளது.  இதனால், கடந்த 5 ஆண்டுகளில் 10 சர்க்கரை ஆலைகள் வரை வருவாயின்றி மூடப்பட்டுள்ளன. 

கரும்பு விவசாயிகளுக்கு ஆலை நிர்வாகங்கள் உடனடியாக தொகையை வழங்காமல் பல கோடி ரூபாய் அளவில் நிலுவை வைத்துள்ளன.  கடந்த 2015-16-ஆம் ஆண்டின் கரும்பு தொகையைக் கூட சில ஆலைகள் நிலுவை வைத்துள்ளன. அரசு அறிவிக்கும் ஆதரவு விலையையும் வழங்காமல் ஏமாற்றுகின்றனர். கரும்பு டன்னுக்கு ரூ.4,000 வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில், டன் ரூ.2,700 அளவில் தான் வழங்கப்பட்டு வருகிறது. 

சர்க்கரை ஆலை நிர்வாகத் தரப்பில் கேட்டால், சர்க்கரை விற்பனை விலை குறைந்து, செலவினங்கள் மிகுதியாவதால் தவிப்பதாகக் கூறுகின்றனர். இந்த நிலை தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதும் உள்ளது. வீழ்ந்து வரும் கரும்பு உற்பத்தியை மீட்பதற்கு மாற்றுத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

எத்தனால் உற்பத்தி: கரும்பிலிருந்து சர்க்கரை மட்டும் பிரதானமாக எடுப்பதோடு அல்லாமல் அதிலிருந்து எத்தனால் எடுப்பதையும் ஊக்கப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்க்கரை ஆலைகளுக்கு அதற்கான அனுமதியை வழங்க வேண்டும்.

ஒரு டன் கரும்பில் 140 லிட்டர் எத்தனால் எடுக்கலாம். ஒரு லிட்டர் எத்தனால் ரூ.40 என்றாலும், 140 லிட்டர் ரூ.5,600 கிடைக்கும். செலவினம் போக வருவாய் மிகுதியாக இருக்கும். விவசாயிகளுக்கான தொகையும் கூடுதலாக வழங்க முடியும். 

இந்தியாவில் 152 சர்க்கரை ஆலைகளில் எத்தனால் எடுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த ஆலைகளில் நல்ல முறையில் சர்க்கரையும், எத்தனாலும் தயாரிக்கப்படுகிறது.  ஒரு ஏக்கர் கரும்புப் பயிரில் 40 டன் கரும்பு அறுவடை செய்யும் பட்சத்தில், அதிலிருந்து 5,500 லிட்டர் எத்தனால் எடுக்கலாம். இதன் மூலம் ரூ.2.24லட்சம் வருவாய் கிடைக்கும்.  ஆலை செலவினம் போக விவசாயிக்கு ரூ.2 லட்சம் வரை வழங்கலாம். இதனால் நல்ல வருவாய்  கிடைக்கும், கரும்பு பயிரிடும் பரப்பும் அதிகரிக்கும்.

பிரேசில் முன்னோடி: பிரேசிலில் அதிகளவில் கரும்பு பயிரிடப்படுகிறது. அங்கே சர்க்கரையும், எத்தனாலும் எடுப்பதால் விவசாயிகள் பலனடைகின்றனர். அந்நாட்டு வாகனங்களில் 85 சதவீதம் எத்தனால் கலந்த எரிபொருளை பயன்படுத்துகின்றனர். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதத்தில் எத்தனால் கலந்த எரிவாயுவை வாகனங்களுக்கு பயன்படுத்துகின்றனர். 

இந்தியாவில் வாகனங்களுக்காக ஆண்டுக்கு ரூ.7  லட்சம் கோடிக்கும் மேல் அரபு நாடுகளிலிருந்து எரிபொருளை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனை குறைக்கும் வகையில்,  கரும்பிலிருந்து எத்தனால் எடுப்பதை மிகைப்படுத்தி, எத்தனால் கலந்த எரிபொருள் பயன்பாட்டையும் கொண்டுவர வேண்டும். 

இதனால்,  சர்க்கரை ஆலைகள் புத்துயிர் பெறுவதுடன், கரும்பு உற்பத்தியையும் மீண்டும் அதிகரிக்க முடியும். சர்க்கரை ஆலைகளும் ஆண்டுக்கு 9 மாதங்கள் வரை இயங்கும் வருவாய் பெருகும். மின்சாரம் உற்பத்தி செய்யலாம். வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும். பெட்ரோலிய இறக்குமதியையும் குறைக்க முடியும் என்பதால் சர்க்கரை ஆலைகளில் எத்தனால் தயாரிக்கும் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்றனர்.

கொள்கை முடிவு தேவை: இதுகுறித்து, அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, சர்க்கரை ஆலைகளில் சர்க்கரை உற்பத்தியே நமது நாட்டில் பிரதானமாக செய்யப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே சில ஆலைகளில் மத்திய அரசு எத்தனால் (ஸ்பிரிட்) எடுக்க அனுமதி வழங்கி எடுத்து வருகின்றனர். உத்தரபிரதேசம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் எத்தனால் எடுக்க அனுமதிக்கப்படுகிறது. தமிழகத்திலும் சில ஆலைகளில் எத்தனால் தயாரிக்கப்படுகிறது. அரசின் கலால் துறையினர் தனி கண்காணிப்பில் இந்த எத்தனால் பெறப்பட்டு, விற்பனைக்கு  செல்கிறது. 

தற்போது வரை எத்தனால் மருந்துகளின் மூலப்பொருள்களாகவும், மது உற்பத்திக்கும் என குறைந்த அளவில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.  சர்க்கரை ஆலைகளில் இரு வகையான எத்தனால் தயாரிக்கப்படுகிறது. ஒன்று மதுபான தயாரிப்புக்கும் மற்றொன்று நெகிழி உற்பத்தி மூலப்பொருளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. 

நமது நாட்டில் பெட்ரோலிய எரிபொருளில் இயங்கும் வாகனங்கள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளதால், எத்தனால் கலந்த எரிபொருளை பயன்படுத்தும் தேவை இல்லாமல் உள்ளது.  எத்தனால் தயாரிப்பு நல்ல திட்டம் என்றாலும்,  மத்திய, மாநில அரசுகள்தான் கொள்கை அளவில் முடிவெடுத்து தயாரிப்பை ஊக்கப்படுத்த வேண்டும். 

எத்தனால் பயன்பாட்டை அதிகரிக்கச் செய்தால் மட்டுமே உற்பத்தியையும் பெருக்க முடியும். எத்தனால் கலந்த எரிபொருள் பயன்பாட்டில் இயங்கும் வாகன உற்பத்திக்கும் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.  மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்தினால் சாத்தியமாகலாம் என்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT