தமிழ்நாடு

செப்.30 வரை காலாண்டு வரியை ரத்து செய்யக்கோரி மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வலியுறுத்தல்

29th Jun 2020 06:03 PM

ADVERTISEMENT

 

கரோனா பொது முடக்கத்தால் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், செப்டம்பர் 30 வரையில் லாரிகளுக்கான காலாண்டு வரியை ரத்து செய்ய வேண்டும் என மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக அச்சம்மேளனத்தின் செயலாளர் ஆர்.வாங்கிலி நாமக்கல்லில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது; 
கரோனா தீநுண்மி தொற்று பரவலால் நாட்டில் அசாதாரண சூழல் நிலவுகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பொது முடக்கம் 5 கட்டங்களாக அமல்படுத்தப்பட்டது. சரக்கு போக்குவரத்துக்கு மட்டும் மத்திய அரசு அனுமதி வழங்கியது. இருந்தபோதிலும் தொழிற்சாலைகள் இயங்காததால் குறைந்த அளவிலேயே லாரிகள் இயக்கப்பட்டன.

லாரி உரிமையாளர்களும், பொதுமக்களும் இந்த பொது முடக்கத்தால் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் சுங்கச்சாவடிகள், காப்பீட்டு நிறுவனங்களை இயங்க மத்திய அரசு அவகாசம் காட்டியது ஏன் எனத் தெரியவில்லை. லாரிகள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் குறைந்த அளவிலே சரக்குகளை ஏற்றிக்கொண்டு செல்லும் நிலை தான் காணப்பட்டது. இதனால் வருவாயின்றி வாகனங்களை இயக்க முடியாமல் போனது.

ADVERTISEMENT

இந்த நிலையில் தமிழக அரசு மே 4-ஆம் தேதி டீசலுக்கான மதிப்புக்கூட்டு வரியை ரூ.2.50 உயர்த்தியது. இதனால் லாரி உரிமையாளர்கள் நெருக்கடிக்குள்ளாகினர். சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டபோதும் இங்கு டீசல் விலை குறைக்கப்படவில்லை. கடந்த 2 வாரங்களில் மட்டும் 11 ரூபாய் 90 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளன. கலால் வரியாக லிட்டருக்கு ரூ.37 வரை வசூலிக்கப்படுகிறது. இவ்வாறான நெருக்கடி மிகுந்த சூழலில் லாரி உரிமையாளர்கள் தொழிலை மேற்கொள்ள வேண்டியது உள்ளது.

லாரித் தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். எனவே, இத்தொழிலை மீட்டெடுக்க லாரிகளுக்கான காலாண்டு வரியை செப்டம்பர் 30 வரையில் தள்ளுபடி செய்ய வேண்டும். இன்சூரன்ஸ் பிரிமியம் தொகையை 6 மாதங்களுக்கு தள்ளுபடி செய்ய வேண்டும். 

வங்கிக் கடன் தவணையைச் செலுத்த 6 மாதங்களுக்கு கால அவகாசம் அளிக்கப்பட நிலையில், அதற்கு விதிக்கப்படும் வட்டியைத் தள்ளுபடி செய்ய வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகளில் அடிக்கடி நடைபெறும் குற்றச்செயல்களைத் தடுக்க வேண்டும். ஒரே நாடு, ஒரே வரி என்று உரைக்கும் மத்திய அரசு டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரவேண்டும் என்றார்.

Tags : Corona
ADVERTISEMENT
ADVERTISEMENT