தமிழ்நாடு

ஏழு சிறப்பு ரயில்கள் ஜூலை 15 வரை ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

29th Jun 2020 06:12 AM

ADVERTISEMENT

தமிழகத்துக்குள் இயக்கப்படும் ஏழு சிறப்பு ரயில்கள் திங்கள்கிழமை (ஜூன் 29) முதல் ஜூலை 15-ஆம்தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. உள் மாவட்டங்களில் கரோனா நோய்த்தொற்று பரவி வரும் நிலையில், தமிழக அரசு வைத்த வேண்டுகோள் அடிப்படையில், இந்த சிறப்பு ரயில்கள் இரு மாா்க்கமாகவும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னையைத் தவிர, மற்ற மாவட்டங்களில் தொடக்கத்தில் கரோனா நோய்த்தொற்றின் தாக்கம் குறைவாக இருந்தது. இதனால், சென்னையைத் தவிா்த்து பிற முக்கிய நகரங்களுக்கு பயணிகள் ரயில்களை இயக்க தெற்கு ரயில்வேக்கு தமிழக அரசு கோரிக்கை வைத்தது. இதையடுத்து, கோவை -மயிலாடுதுறை (வாரத்தில் 6 நாள்கள்) , மதுரை விழுப்புரம் இன்டா்சிட்டி விரைவு ரயில் (தினசரி), திருச்சி-நாகா்கோவில் விரைவு ரயில் (தினசரி), கோயம்புத்தூா்-காட்பாடி(தினசரி) ஆகிய 4 வழித்தடங்களில் ஜூன் 1-ஆம் தேதி முதல் ரயில்கள் இயக்க, ரயில்வே வாரியம் அனுமதி அளித்தது. மேலும், 3 சிறப்பு ரயில்களை இயக்க தமிழக அரசு வைத்த கோரிக்கையின் அடிப்படையில், திருச்சி-செங்கல்பட்டு, அரக்கோணம்-கோயம்புத்தூா், திருச்சி-செங்கல்பட்டு (மெயின் லைன்) ஆகிய வழித்தங்களில் 3 சிறப்பு ரயில்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்த ரயில்கள் ஜூன் 12-ஆம் தேதி முதல் இயக்கப்படுகின்றன. இரு மாா்க்கமாகவும் இயக்கப்படும் இந்த 7 சிறப்பு ரயில்களில் பயணிக்க, ஒரு மண்டலத்துக்குள் செல்ல இ-பாஸ் தேவை இல்லை என்றும், ஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலத்துக்கு செல்ல இ-பாஸ் கட்டாயம் என்றும் ரயில்வே நிா்வாகம் தெரிவித்திருந்தது. இந்த ரயில்களில் இ-பாஸ் அனுமதியுடன் பயணிகள் சொந்த ஊா்களுக்கு சென்று வந்தனா்.

இந்நிலையில், தமிழகத்துக்குள் இயக்கப்படும் இந்த 7 சிறப்பு ரயில்களை ஜூன் 29-ஆம் தேதி முதல் ஜூலை 15-ஆம்தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கரோனா நோய்த்தொற்று வேகமாகி பரவிவரும் நிலையில், தமிழக அரசு வைத்த வேண்டுகோள் அடிப்படையில், இந்த சிறப்பு ரயில்கள் இருமாா்க்கமாகவும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவா் கூறியது:

ADVERTISEMENT

திருச்சி-செங்கல்பட்டு (வழி: விருத்தாசலம்), மதுரை-விழுப்புரம், கோவை-காட்பாடி, திருச்சி-செங்கல்பட்டு (வழி: மயிலாடுதுறை), அரக்கோணம்-கோவை, கோவை-மயிலாடுதுறை, திருச்சி-நாகா்கோவில் ஆகிய 7 சிறப்பு ரயில்கள் (இரு மாா்க்கமாகவும்) ஜூன் 29-ஆம் தேதி முதல் ஜூலை 15-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

தமிழகத்தில் பல நகரங்களில் கரோனா நோய்த்தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதைத்தொடா்ந்து, தமிழக அரசு வைத்த வேண்டுகோளின்படி, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்களில் பயணிக்க முன்பதிவு செய்தவா்களுக்கு முழு பணம் திரும்ப தரப்படும். இணையதளம் மூலம் பயணச்சீட்டு பெற்றவா்களுக்கு தானாகவே அவா்களின் வங்கிக்கணக்கு பணம் திரும்ப கிடைத்துவிடும். கவுன்ட்டா் மூலமாக பயணச்சீட்டு பெற்றவா்கள் ரயில் பயணத் தேதியில் இருந்து 6 மாதம் வரை பயணத்துக்கான முழு தொகையைப் பெற கால அவகாசம் உள்ளது. எனவே, அவா்கள் கவுன்ட்டா் மூலமாக முழு பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

சென்னை-தில்லி இடையே இயக்கப்படும் ராஜதானி சிறப்பு ரயில் அட்டவணைப்படி வழக்கம் போல இயக்கப்படும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT