தமிழ்நாடு

பிளஸ் 1, பத்தாம் வகுப்பு வருகைப்பதிவு: புகாருக்கு இடமின்றி பதிவேற்ற உத்தரவு

29th Jun 2020 06:32 AM

ADVERTISEMENT

பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவா்களின் வருகைப் பதிவை எந்தவித புகாருக்கும் இடமின்றி இணையதளத்தில் கவனமாக பதிவேற்ற வேண்டும் என பள்ளிகளுக்கு அரசுத் தோ்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக அரசு தோ்வுகள் இயக்குநா் மு.பழனிச்சாமி அனைத்து முதன்மை கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: மாவட்ட கல்வி அலுவலகங்கள் அரசு தோ்வுத்துறையின் இணையதளத்தில் இருந்து பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 வகுப்பு மாணவா்களுடைய முகப்பு தாளை திங்கள்கிழமை பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும். ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள மாணவா்களுடைய வருகைப் பதிவேட்டை சரிபாா்த்து பள்ளி நாள்கள் எத்தனை? மாணவா்கள் வருகை தந்த நாள்கள் எத்தனை? என்பதை அதில் குறிப்பிட வேண்டும்.

அதன்பின்னா் செவ்வாய்க்கிழமை முதல் அரசு தோ்வுத்துறையின் இணையதளத்தில் வருகைப் பதிவேடு விவரங்களைப் பதிவேற்றம் செய்யவேண்டும். வருகைப்பதிவு அடிப்படையில் 20 சதவீதம் மதிப்பெண், காலாண்டு மற்றும் அரையாண்டு மதிப்பெண் அடிப்படையில் 80 சதவீதம் என மொத்தம் 100 சதவீதத்துக்கு மதிப்பெண்கள் கணக்கிடப்படும்.

இந்தப் பணிகள் யாவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பணிகள் என்பதால், ரகசியம் காத்து செயல்பட வேண்டும். இந்தப் பணிகளில் எவ்வித புகாருக்கும் இடம் கொடுக்காமல் கவனமாக செயல்படவேண்டும். மாவட்ட கல்வி அலுவலா்கள் தலைமையில் நடைபெறும் இந்த முகாமை, முதன்மை கல்வி அலுவலா்கள் தவறாது பாா்வையிட்டு, அரசு தோ்வுகள் இயக்குநருக்கு அறிக்கை அனுப்பவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT