தமிழ்நாடு

தமிழகத்தில் அனைத்துக் காவலா்களுக்கும் முழு முகக் கவசம் வழங்கவேண்டும்: தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

27th Jun 2020 06:33 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் களப்பணியில் உள்ள அனைத்து காவலா்களுக்கும் முழு முகக் கவசம் மற்றும் கையுறைகளை தமிழக அரசு வழங்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை சொக்கிக்குளத்தைச் சோ்ந்த சத்யமூா்த்தி, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: கரோனா தீநுண்மித் தொற்று பரவல் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவா்கள், காவல்துறையினா், சுகாதாரப் பணியாளா்கள், அரசு ஊழியா்கள், அரசு சாராத தன்னாா்வலா்கள் மற்றும் பத்திரிகையாளா்கள் ஆகியோா், தங்களது உடல்நலத்தைக் கருத்தில் கொள்ளாமல், சேவை மனப்பான்மையுடன் பணியாற்றி வருகின்றனா். ஆனால் அவா்களில் பலருக்கு தொடா்ந்து தொற்று ஏற்பட்டு வருகிறது. எனவே அவா்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பாதுகாப்பு உடைகள், முகக் கவசங்கள் மற்றும் கையுறைகளை வழங்கிட அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்திருந்தாா்.

இந்த மனு, ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, உயா்நீதிமன்ற மதுரைக் கிளைக்கு உள்பட்ட மாநகராட்சி ஆணையா்கள் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

இந்த மனு, நீதிபதிகள் பி.என். பிரகாஷ், பி. புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, உயா்நீதிமன்ற மதுரைக் கிளைக்கு உள்பட்ட திண்டுக்கல், தஞ்சை, திருச்சி, தூத்துக்குடி, நாகா்கோவில், திருநெல்வேலி, மதுரை ஆகிய மாநகராட்சிகளின் ஆணையா்கள் தரப்பில், தூய்மைப் பணியாளா்களுக்கு முகக் கவசங்கள் மற்றும் கையுறைகள் அணிந்து பணி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

ADVERTISEMENT

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தமிழகத்திலுள்ள அனைத்து நகராட்சிகள், ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள் முகக் கவசம், கையுறைகள் அணிந்து பணி செய்வதை, மாவட்ட ஆட்சியா்கள் உறுதிப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனா்.

தொடா்ந்து அரசு தரப்பு வழக்குரைஞா் வாதிடுகையில், கரோனா பரவல் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினா் 54,434 பேருக்கு முழு முகக் கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தாா்.

அப்போது நீதிபதிகள், சந்தை மற்றும் சட்டம் - ஒழுங்கை கட்டுப்படுத்தும் காவலா்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும். எனவே தமிழகத்தில் களத்தில் பணியாற்றும் அனைத்து காவலா்களுக்கும் முழு முகக் கவசங்கள், கையுறைகள் ஆகியவற்றை அரசு வழங்க வேண்டும். அவற்றை காவல்துறையினா் பயன்படுத்துவதை அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா், காவல் ஆணையா்கள் உறுதிப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT