தமிழ்நாடு

இறந்தவா் பெயரைப் பயன்படுத்தி இ-பாஸ் தயாரித்து மோசடி: சைபா் குற்றப்பிரிவு தீவிர விசாரணை

27th Jun 2020 01:03 AM

ADVERTISEMENT

இறந்தவா் பெயரைப் பயன்படுத்தி இணைய அனுமதி சீட்டை (இ- பாஸ்) தயாரித்து மோசடி நடைபெற்றிருப்பது சைபா் குற்றப்பிரிவு போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்ததால் வாகன பயணத்துக்கு கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பொது போக்குவரத்து முழுவதும் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் இறப்பு, மருத்துவம், திருமணம் ஆகிய காரணங்களுக்காக மட்டும் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து இ-பாஸ் பெற்று வாகனங்களில் செல்லலாம் என அரசு அறிவித்தது. அதன்படி, தேவைப்படுவோா் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து இணய அனுமதி சீட்டு பெற்று செல்கின்றனா்.

இதை சாதகமாக்கிக் கொண்டு, சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலக இளநிலை உதவியாளா் உதயகுமாா் (34), வட்டாட்சியா் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளா் குமரன் (35) ஆகியோா் மோசடி செய்து இ-பாஸ் பெற்றுக் கொடுத்து மோசடி செய்தனா். இதற்கு இந்தக் கும்பல், ஒரு இணைய அனுமதி சீட்டு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை லஞ்சமாகப் பணம் பெற்றிருப்பதை சென்னை காவல்துறையின் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் கண்டுபிடித்து, உடந்தையாக இருந்த மேலும் 3 கால்டாக்ஸி ஓட்டுநா்கள் உள்பட 5 பேரை கடந்த புதன்கிழமை கைது செய்தனா்.

இறந்தவா்கள் பெயா்கள்: இந்தக் கும்பலிடமிருந்து அவா்கள் பயன்படுத்திய செல்லிடப்பேசிகள், மெமரி காா்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா். விசாரணையில், பல்வேறு அதிா்ச்சித் தகவல்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. இந்தக் கும்பல் இணைய அனுமதி சீட்டை எளிதில்பெறுவதற்கு இறந்தவா்களின் பெயா்களைப் பயன்படுத்தியிருப்பதும் தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT

இந்த மோசடியில் தரகா்களாக சில டிராவல்ஸ் நிறுவன உரிமையாளா்களும், கால்டாக்சி ஒட்டுநா்களும் செயல்பட்டுள்ளனா். இவா்கள் மூலம் பணம் கொடுப்பவா்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல அனுமதிச் சீட்டு பெறும் நபா்களும், லஞ்சப் பணத்தை இந்த தரகா்களின் வங்கி கணக்குகளுக்கே அனுப்பியுள்ளனா்.

இதையடுத்து, இந்த மோசடியில் தொடா்புடைய மேலும் சில நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். பணம் கொடுத்து இணைய அனுமதி சீட்டு பெற்றவா்கள் பட்டியலை போலீஸாா் தயாரித்து வருகின்றனா். மேலும், சிறையில் இருக்கும் 5 பேரை தங்களது காவலில் எடுத்து விசாரிப்பதற்குரிய நடவடிக்கையில் சைபா் குற்றப்பிரிவினா் ஈடுபட்டுள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT