தமிழ்நாடு

கரோனா சிகிச்சை: விலையுயர்ந்த மருந்துகளை வாங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு

27th Jun 2020 05:40 PM

ADVERTISEMENT


சென்னை: விலைமதிப்பில்லாத உயிர்களை காக்கும் பொருட்டு கரோனா சிகிச்சைக்கு விலை உயர்ந்த ஊசி, மருந்துகளை கொள்முதல் செய்ய தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், தமிழக அரசு, முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் கரோனா நோய் தொற்றை தடுக்கவும் , கட்டுப்படுத்தவும், தீவிர முனைப்புடன் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

1,769 மருத்துவர்கள் உட்பட 14,814 மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் கூடுதலாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஏழை எளிய மக்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோக்கில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் எவ்வித கட்டணமும் இல்லாமல் சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளன.

தனியார் மருத்துவமனைகள் கரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து வசூலிக்க வேண்டிய கட்டணத்தை நிர்ணயித்தும் தமிழக முதலமைச்சரால்  உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

கரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கும் நோக்கத்தோடு உயிர்காக்கும் விலை உயர்ந்த ஊசி மருந்துகளை தருவித்து பயன்படுத்த தமிழக முதல்வர் உத்தரவிட்டார். இதனையடுத்து தமிழ்நாடு மருத்துவப் பணிகள் சேவைகக் கழகம் மூலம் 1,200 குப்பிகள் Tocilizumab (400 mg), 42,500 குப்பிகள் Remdesivir (100 mg) மற்றும் 1,00,000 குப்பிகள் Enoxaparin (40 mg) ஊசி மருந்துகளை வாங்குவதற்கு கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்டு, இதுவரை 1000 குப்பிகள், 1100 குப்பிகள் மற்றும் 1,00,000 குப்பிகள் முறையே பெறப்பட்டுள்ளன. மீதமுள்ள குப்பிகள் ஓரிரு நாள்களில் வந்தடையும்.

இந்த உயரிய உயிர்காக்கும் ஊசி மருந்துகள் மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற உயர்தர உயரிய உயிர்காக்கும் மருந்துகளை கொள்முதல் செய்வதும், இம்மருந்துகள் மாவட்ட அளவில் இருப்பில் வைத்து பயன்படுத்துவதிலும் இந்திய அளவில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. மேலும் தேவையின் அடிப்படையில் இம்மருந்துகள் கூடுதலாக தருவிக்கப்படும். தமிழக முதல்வரின் இதுபோன்ற மக்கள் நலன் காக்கும் நடவடிக்கைகள் விலை மதிப்பில்லாத மனித உயிரிழப்புகளை தவிர்க்க உதவும் என்று தெரிவித்துள்ளார்.
 

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT