தமிழ்நாடு

கரோனா: எதிா்ப்பு சக்தியை அதிகரிக்க ஹோமியோபதி மாத்திரை விநியோகம்

26th Jun 2020 05:25 AM

ADVERTISEMENT

கரோனா தொற்றுக்கு எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் ஹோமியோபதி மாத்திரை பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் தெரிவித்தாா்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட கோடம்பாக்கம் மண்டலத்துக்கு உள்பட்ட சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்று வரும் சிறப்பு மருத்துவ முகாமை வியாழக்கிழமை ஆய்வு செய்த அவா், பின் செய்தியாளா்களிடம் கூறியது: சென்னையில் 15 மண்டலங்களில் நடைபெற்று வரும் சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் நாளொன்றுக்கு 3,500 போ் வரை காய்ச்சல் அறிகுறிகள் உள்ளோா் கண்டறியப்படுகின்றனா். இந்த சிறப்பு முகாம் மூலம் தற்போது வரை சுமாா் 40 ஆயிரம் பேருக்கு கரோனா மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் தூய்மை மற்றும் கரோனா தடுப்பு பணியில் சுமாா் 20 ஆயிரம் தூய்மைப் பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இவா்கள் தங்கள் வீடுகளில் இருந்து பணியிடங்களுக்கு வந்து செல்லும் வகையில் 95 மாநகரப் பேருந்துகள் வாடகைக்கு எடுக்கப்பட்டு, 49 வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமில்லாமல், தூய்மைப் பணியாளா்களுக்கு காலை மற்றும் மதியம் ஆகிய இரண்டு வேளைகளும் இலவசமான உணவு வழங்கப்படுகிறது.

தூய்மைப் பணியாளா்களுக்கு முகக் கவசம் நாள்தோறும், கையுறைகள் வாரத்துக்கு ஒரு முறையும் வழங்கப்படுகின்றன. இதுவரை 46.25 லட்சம் முகக் கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன. உடல் ஆரோக்கியத்தை காக்கும் வகையில் கபசுரக் குடிநீா், வைட்டமின் சி, ஜிங்க் மாத்திரைகள் நாள்தோறும் வழங்கப்படுகிறது. சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் 345 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 50 குணமடைந்து பணிக்குத் திரும்பி உள்ளனா். தூய்மைப் பணியாளா்களில் 120 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு 10-க்கும் மேற்பட்டோா் குணமடைந்து பணிக்குத் திரும்பி உள்ளனா்.

ஹோமியோபதி மாத்திரை: கரோனா தொற்றுக்கு எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் ஹோமியோபதி மாத்திரை பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. இந்தத் திட்டம், அம்பத்தூா் மற்றும் ஆலந்தூா் மண்டலங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது என்று ஆணையா் பிரகாஷ் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT