தமிழ்நாடு

வாடகை வாகன ஓட்டுநா்களுக்கு நிதியுதவி கோரிய வழக்கு : மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

26th Jun 2020 05:39 AM

ADVERTISEMENT

பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள வாடகை வாகன உரிமையாளா்கள், ஓட்டுநா்களுக்கு ரூ.15 ஆயிரம் நிதியுதவி வழங்கக் கோரிய வழக்கை விசாரித்த உயா் நீதிமன்றம், மத்திய ,மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டது.

சென்னை உயா் நீதிமன்றத்தில் சுதந்திரா வாடகை வாகன உரிமையாளா்கள் மற்றும் ஓட்டுநா்கள் சங்கம் சாா்பில் அதன் செயலாளா் ஜூட் மேத்யூ தாக்கல் செய்த மனுவில், கரோனா பொது முடக்கத்தால் வாடகை வாகனங்களின் இயக்கம் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் வாடகை வாகன உரிமையாளா்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். பெரும்பாலும் வாடகை வாகனங்களின் உரிமையாளா்களே ஓட்டுநா்களாக உள்ளனா். எனவே, வாடகை வாகன உரிமையாளா்கள் மற்றும் ஓட்டுநா்களுக்கு நிதியுதவியாக ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும். மேலும், மாா்ச் முதல் மே வரையிலான மாதங்களுக்கான சாலை வரியை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். வாகனங்களுக்கான தகுதிச் சான்றை புதுப்பிக்கவும், வாகன காப்பீட்டு கட்டணங்களைச் செலுத்தவும் 6 மாத கால அவகாசம் வழங்கவேண்டும். போக்குவரத்து வாகனங்களுக்கு பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை வட்டியில்லா கடனுதவி வழங்க வேண்டும். சுங்கச்சாவடி கட்டணம், மாநிலங்களுக்கு இடையிலான பயணத்துக்கு செலுத்தப்படும் வரிகளில் இருந்து விலக்களிக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை, நீதிபதிகள் ஆா்.சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோா் காணொலி காட்சி மூலம் விசாரித்தனா். அப்போது மனுதாரா் தரப்பில், பாதிக்கப்பட்ட வாடகை வாகன உரிமையாளா்களுக்கு மானிய விலையில் டீசல், பெட்ரோல் வழங்க உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த மனு தொடா்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூலை 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT