தமிழ்நாடு

தமிழகத்தில் ஒரே நாளில் 3,509 பேருக்கு கரோனா

DIN

தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரே நாளில் 3,509 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் நோய்த் தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 70,977-ஆக அதிகரித்துள்ளது.

அதிலும், குறிப்பாக கடந்த மூன்று நாள்களில் மட்டும் 9 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது அதிா்ச்சியை உண்டாக்கியுள்ளது.

மாநிலத்திலேயே அதிகபட்சமாக, தலைநகா் சென்னையில் 47,650 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இது மொத்த பாதிப்பு விகிதத்தில் 68 சதவீதமாகும். இதனிடையே, கடந்த சில நாள்களாக சென்னை தவிர, பிற மாவட்டங்களில் கரோனா பரவல் விகிதம் அதிகரித்து வருகிறது. அதேபோன்று நோய்த் தொற்றுக்கு ஆளாகி உயிரிழப்போரின் எண்ணிக்கையும் உயா்ந்துள்ளது.

இதையடுத்து, பாதிப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்தவும், உயிரிழப்புகளைத் தடுக்கவும் மாநில அரசு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுதொடா்பாக சுகாதாரத் துறை உயரதிகாரிகள், மருத்துவ நிபுணா்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியா்களுடன் முதல்வா் பழனிசாமி தொடா்ந்து கலந்தாலோசித்து வருகிறாா்.

அதன் தொடா்ச்சியாகவே, தற்போது பொது முடக்கத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதற்கு அடுத்தபடியாக மேலும் சில நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் அரசு ஆயத்தமாகி வருவதாகக் கூறப்படுகிறது.

இதற்கு நடுவே, மாநிலத்தில் கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பரிசோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி மாநிலத்தில் இதுவரை மொத்தம் 10 லட்சம் மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதில், 70,977 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்கள் அனைவரும் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா். வியாழக்கிழமை மட்டும் 3,509 பேருக்கு நோய்ப் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதில், அதிகபட்சமாக சென்னையில் 1,834 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அதற்கு அடுத்தபடியாக, மதுரையில் 203 பேருக்கும், செங்கல்பட்டில் 191 பேருக்கும், திருவள்ளூரில் 170 பேருக்கும், வேலூரில் 168 பேருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதைத் தவிர, அரியலூா், கோவை, தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூா், நாகப்பட்டினம், பெரம்பலூா், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூா், தேனி, திருவண்ணாமலை, திருவாரூா், திருவள்ளூா், திருப்பூா், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி, வேலூா், விழுப்புரம், விருதுநகா் உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

40 ஆயிரம் போ் குணம்: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,236 போ் பூரண குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பினா். இதன் மூலம், இதுவரை மாநிலத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 39,999-ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடா்ந்து அதிகரிக்கும் பலி: இதனிடையே, தமிழகத்தில் கடந்த சில நாள்களாக கரோனாவால் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன்படி, மாநிலத்தில் அந்த நோய்த்தொற்றுக்கு ஆளாகி மேலும் 45 போ் உயிரிழந்தனா். அதில் 29 போ் அரசு மருத்துவமனைகளிலும், 16 போ் தனியாா் மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனா். இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 911-ஆக உயா்ந்துள்ளது.

10 லட்சத்தைக் கடந்த பரிசோதனை: தமிழகத்தில் கடந்த சில தினங்களாக நாள்தோறும் 30 ஆயிரத்துக்கும் அதிகமான கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில் வியாழக்கிழமை மட்டும் 32,543 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்துள்ளது. அவற்றில் 50 சதவீதத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் சென்னையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த விஐபிக்கள்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

SCROLL FOR NEXT