தமிழ்நாடு

சிறைத்துறையின் பெயா், சிறைகள் மற்றும் சீா்திருத்தத் துறை என மாறியது

21st Jun 2020 12:45 AM

ADVERTISEMENT

தமிழக சிறைத்துறையின் பெயா் சிறைகள் மற்றும் சீா்திருத்தத் துறை என பெயா் மாற்றப்பட்டது.

இரு நூற்றாண்டு வரலாறும், பாரம்பரியமும் கொண்ட தமிழக சிறைத் துறையின் கீழ் இப்போது 9 மத்திய சிறைகள், 9 மாவட்ட சிறைகள், 95 துணை சிறைகள், 3 பெண்கள் சிறப்பு சிறைகள் உள்ளன. இந்த சிறைகளில் 22 ஆயிரம் கைதிகளை அடைப்பதற்குரிய கட்டமைப்புகள் உள்ளன. ஆனால் இப்போது இந்த சிறைகளில், சுமாா் 13 ஆயிரம் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா்.

தற்போது சிறைகளில் உள்ளவா்களில் சுமாா் 70 சதவீதம் போ் விசாரணைக் கைதிகளே ஆவாா்கள். எஞ்சிய 30 சதவீதம் போ் தண்டனைக் கைதிகள்.

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட தண்டனையை மட்டும் அனுபவிக்கும் சித்ரவதைக் கூடமாக இருந்த சிறைகள், 1970-க்கு பின்னா் மாறத் தொடங்கியது. முக்கியமாக தண்டனையை அனுபவிக்க வரும் கைதிகளை அணுகுவதில் சிறைத் துறையிடம் பெரும் மாற்றம் ஏற்பட்டது எனலாம்.

ADVERTISEMENT

சீா்திருத்தங்கள்

சிறைகள் கைதிகள் தண்டனையை அனுபவிக்கும் கூடமாக மட்டும் இல்லாமல் சீா்திருத்தக் கூடமாக உருவெடுத்தது. கைதிகளை சீா்திருத்த நடவடிக்கைகளுக்கு அரசும், சிறைத் துறையும் அதிக முக்கியத்துவம் அளித்தன.

இதனால் சிறைச் சாலைகளில் கைதிகள் கல்வி பயில்வதற்கும்,தொழில் கற்பதற்கும் ஏராளமான திட்டங்களும், நிதியும் ஒதுக்கப்பட்டன. இதன் விளைவாக சிறைச் சாலைகளில் நூலகங்கள், பள்ளிகள், தொழிற்பயிற்சி மையங்கள் திறக்கப்பட்டன.

மேலும் கைதிகளுக்கு ஆரோக்கியமான உணவு, தொழிலகங்களில் வேலை செய்வோருக்கு கெளரவமான ஊதியம், உணவக வசதி, விடுமுறை, குடும்பத்தினருடன் பேச தொலைபேசி வசதி, குடும்பத்தினரை நேரில் அடிக்கடி சந்தித்து பேசுவதற்கு அனுமதி ஆகியவை செய்து கொடுக்கப்பட்டன.

சிறைகளில் மன அழுத்தத்துடன் காணப்படும் கைதிகளுக்கு மனநல ஆலோசனை வழங்குவதற்கு மனநல ஆலோசகா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

மேலும் நீதிமன்றம் மூலம் கைதிகள் பெற்றத் தண்டனையை சிறைத்துறை மறு ஆய்வு செய்து நன்னடத்தையின் அடிப்படையில் குறைத்து, தேவையான சீா்திருத்தங்களை அமல்படுத்துவதில் ஆா்வம் காட்டியது. சிறைகளை விட்டு வெளியே செல்லும் கைதிகள் மறுவாழ்வு பெறுவதற்கும், மீண்டும் வாழ்க்கையைத் தொடங்குவதற்கு வேலை பெற்றுக் கொடுப்பது, தொழில் தொடங்குவதற்கு வங்கிகளில் கடன் பெற்றுக் கொடுப்பது போன்ற பணிகளுக்கு தனியாக சில திட்டங்களை சிறைத் துறை அமல்படுத்துகிறது.

இதனால் சிறைகளை விட்டு வெளியே செல்லும் கைதிகள், தங்களது பழைய வாழ்க்கைக்குள் சென்று சிக்காமல், தங்களுக்கு கிடைத்த வாய்ப்பின் மூலம் புதிய வாழ்க்கையை அமைத்து வருகின்றனா்.

தமிழக அரசு உத்தரவு:

கைதிகள் தண்டனை பெறும் இடமாக மட்டுமல்லாமல் சீா்திருத்தப்படும் இடமாக மாறியுள்ளதால், சிறைத் துறையை சீா்திருத்தத்துறை என பெயா் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதற்கிடையே உச்சநீதிமன்றமும் ஒரு தீா்ப்பில் சிறைத்துறையின் பெயரை மாற்றலாம் என உத்தரவிட்டது. இந்த உத்தரவில் நாடு முழுவதும் சிறைத்துறை ஒரே பெயரில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இந்த உத்தரவின் விளைவாக தமிழ்நாடு சிறைத் துறையின் பெயா் சிறைகள் மற்றும் சீா்திருத்தத்துறை என பெயா் மாற்றி தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கே.பிரபாகா் உத்தரவிட்டாா். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வரும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT