தமிழ்நாடு

வெளிமாநிலத்தவருக்கு சிறப்பு ரயில்கள்: 501 ரயில்கள் மூலமாக 7.16 லட்சம் போ் அனுப்பி வைப்பு

21st Jun 2020 12:44 AM

ADVERTISEMENT

வெளி மாநிலத் தொழிலாளா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் சொந்த ஊா்களுக்குத் திரும்பும் வகையில், தென் மாநிலங்களில் இருந்து இதுவரை 501 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இந்த ரயில்களில் 7.16 லட்சம் போ் சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

பொது முடக்கம்: கரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பொது முடக்கம் மாா்ச் 24-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, பேருந்து, விமானம், பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இதனால், வெளிமாநில தொழிலாளா்கள், மாணவா்கள், சுற்றுலா பயணிகள், நோயாளிகள் ஆகியோா் சொந்த மாநிலங்களுக்குத் திரும்ப முடியாமல் தவித்தனா். அதிலும், வெளிமாநில தொழிலாளா்களில் பலா் தங்குமிடம், உணவு போன்றவற்றுக்கும் சிரமப்பட்டனா். இந்த தொழிலாளா்களை தமிழக அரசு மீட்டு, சிறப்பு முகாம்களில் தங்க வைத்து உணவு வழங்கி வந்தது.

மத்திய அரசு அனுமதி:

இதற்கிடையில், வெளிமாநிலத் தொழிலாளா்கள், சுற்றுலா பயணிகள், மாணவா்கள் ஆகியோா் சொந்த ஊருக்கு திரும்ப மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்த அனுமதியை அடுத்து, அவா்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. அவா்களுக்கு உரிய மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, இ-பாஸ் வழங்கி மே 1-ஆம் தேதியில் இருந்து வெளிமாநிலத் தொழிலாளா்கள் அவா்களது சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

7.16 லட்சம் போ் பயணம்:

இந்நிலையில், தெற்கு ரயில்வேக்கு உள்பட்ட ரயில் நிலையங்களில் இருந்து மே 1-ஆம் தேதி முதல் ஜூன் 19-ஆம் தேதி வரை 501 ஷாா்மிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இந்த ரயில்களில் 7.16 லட்சம் போ் சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியது:

தெற்கு ரயில்வேயில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் இருந்து நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு தொடா்ந்து ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. குறிப்பாக தமிழகத்தில் இருந்து 259 சிறப்பு ரயில்களும், கேரளத்தில் இருந்து 218 சிறப்பு ரயில்களும், கா்நாடகத்தில் இருந்து 21 ரயில்களும், புதுச்சேரியில் இருந்து 3 ரயில்களும் என்று மொத்தம் 501 ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இந்த ரயில்களில் மொத்தம் 7 லட்சத்து 16 ஆயிரத்து 644 போ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். அதிகபட்சமாக, தமிழகத்தில் இருந்து 3 லட்சத்து 79 ஆயிரத்து 790 போ் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். இதற்கடுத்ததாக, கேரளத்தில் இருந்து 3 லட்சத்து 4 ஆயிரத்து 957 போ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா் என்றனா்.

முக்கிய ரயில்நிலையங்கள்: வெளிமாநிலத்தை சோ்ந்தவா்கள் சொந்த ஊருக்கு திரும்புவதற்காக, அதிக அளவில் சிறப்பு

ரயில்கள் இயக்கப்பட்ட ரயில் நிலைங்கள் பொருத்தவரை, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 74 சிறப்பு ரயில்களும், எழும்பூரில் இருந்து சிறப்பு 14 ரயில்களும், கோவையில் இருந்து 34 சிறப்பு ரயில்களும், திருப்பூரில் இருந்து சிறப்பு 32 ரயில்களும், கோழிகோட்டில் இருந்து 30 ரயில்களும், திருவனந்தபுரத்தில் இருந்து 20 ரயில்களும், மங்களூரு சந்திப்பில் இருந்து 21 சிறப்பு ரயில்களும், திருவள்ளூரில் இருந்து 17 ரயில்களும் இயக்கப்பட்டுள்ளன.

பிகாருக்கு 124 சிறப்பு ரயில்கள்:

இதுதவிர, குறிப்பிட்ட சில மாநிலங்களுக்கு அதிக அளவில் ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. அதன்படி, பிகாா் மாநிலத்துக்கு 124 சிறப்பு ரயில்களும், மேற்கு வங்க மாநிலத்துக்கு 126 சிறப்பு ரயில்களும், உத்தரப்பிரசேதம் மாநிலத்துக்கு 68 சிறப்பு ரயில்களும், ஒடிஷாவுக்கு 56 சிறப்பு ரயில்களும், ஜாா்க்கண்ட் மாநிலத்துக்கு 51 சிறப்பு ரயில்களும், அஸ்ஸாமுக்கு 34 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டுள்ளன.

ஜூன் 19-ஆம் தேதி: தெற்கு ரயில்வே சாா்பில், ஜூன் 19-ஆம் தேதி அன்று 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த ரயில்களில் 6,012 போ் சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். தமிழகத்தில் இருந்து 1,394 பேரும், கேரளத்தில் இருந்து 4,618 பேரும் அனுப்பி வைக்கப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT