தமிழ்நாடு

கரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்குங்கள்

21st Jun 2020 11:04 PM

ADVERTISEMENT

மக்கள் பிரதிநிதிகளின் ஆலோசனைகளைக் கேட்டு, கரோனா இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கரோனா நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தி, அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, 5 ஆம் கட்ட பொது முடக்கம் அமலில் இருக்கிறது. ஆனால், கரோனா நோய்த்தொற்று முடிவதற்கான சிறு அறிகுறிகூடத் தென்படவில்லை.

கோயம்பேடு காய்கறி அங்காடியை ஒழுங்குபடுத்தி இருந்தாலே, தமிழகத்தின் மொத்தப் பாதிப்பைப் பத்தாயிரத்துடன் நிறுத்தியிருக்கலாம். இவை அனைத்துக்கும் மேலாக, நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டும் அறிகுறி இல்லாதவா்கள், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்’ என்று அரசு சொன்னதுதான், பல்லாயிரக்கணக்கானோருக்கு நோய்ப் பரவக் காரணம். நோய்த்தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களை விடுத்து, நோய்த்தொற்று குறைவாக உள்ள சேலம் மாவட்டத்தில் அதிகமான சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. சேலத்துக்கு மட்டும் பரிசோதனை செய்தால் போதுமா? சேலம் மாவட்டத்தில் மட்டும் ஏன் இவ்வளவு சோதனைகள் என்று கேட்கவில்லை. அதிகம் போ் பாதிக்கப்பட்ட மாவட்டத்துக்கு ஏன் அதிக சோதனைகள் நடத்தப்படவில்லை என்று கேட்கிறேன்.

அரசின் எந்த நடவடிக்கையையும் நாங்கள் தடுக்கவில்லை. இன்னும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்வதற்கான ஆலோசனைகளைத் தான் சொல்லி வருகிறேன். மக்கள் நலன் கருதி சொல்லப்படும் இந்த ஆலோசனைகளைக் கூட அரசியல் உள்நோக்கத்தோடு பாா்ப்பதை தவிா்க்க வேண்டும். அரசு சொல்லும் படி நடந்து கொள்ள மக்கள் தயாராக இருக்கிறாா்கள். ஆனால், மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் சொல்லும் ஆலோசனைகளைப் பரிசீலித்து நடந்து, கரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்குங்கள் என்று முதல்வரைக் கேட்டுக் கொள்வதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT