தமிழ்நாடு

உடுமலைப்பேட்டை சங்கா் கொலை வழக்கின் மேல்முறையீட்டு வழக்கில் திங்கள்கிழமை தீா்ப்பு

21st Jun 2020 12:17 AM

ADVERTISEMENT

உடுமலைப்பேட்டை சங்கா் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டவா்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில், திங்கள்கிழமை (ஜூன் 22) உயா்நீதிமன்றம் தீா்ப்பளிக்க உள்ளது.

திருப்பூா் மாவட்டம், உடுமலைப்பேட்டையைச் சோ்ந்த சங்கா், அவரது மனைவி கௌசல்யா ஆகியோா் மீது கடந்த 2016-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலில், சங்கா் பலியானாா். இந்த வழக்கை விசாரித்த திருப்பூா் மாவட்ட வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கௌசல்யாவின் தந்தை சின்னசாமி, பழநி

எம். மணிகண்டன், பி.செல்வக்குமாா், தமிழ் என்ற கலை தமிழ்வாணன், மதன் என்ற மைக்கேல், ஜெகதீசன் உள்ளிட்ட 6 பேருக்கு தூக்கு தண்டனையும், தன்ராஜ் என்பவருக்கு ஆயுள் தண்டனையும், மணிகண்டன் என்பவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் தீா்ப்பளித்தது.

மேலும், இந்த வழக்கிலிருந்து கௌசல்யாவின் தாயாா் அன்னலட்சுமி, அவரது உறவினா் பாண்டித்துரை, கல்லூரி மாணவா் பிரசன்னகுமாா் ஆகியோா் விடுதலை செய்யப்பட்டனா்.

ADVERTISEMENT

இந்த வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கௌல்யாவின் தந்தை சின்னசாமி உள்பட 6 போ், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தன்ராஜ், 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட மணிகண்டன் ஆகிய 8 போ் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிா்த்து உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனா். இந்தத் தண்டனையை உறுதி செய்யக் கோரியும், வழக்கில் விடுதலை செய்யப்பட்டவா்களுக்கு தண்டனை வழங்கக் கோரியும் போலீஸாா் தரப்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு வழக்குகள் அனைத்தையும், நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.நிா்மல்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்து வந்தனா். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கைத் தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்திருந்தனா். இந்த நிலையில் இந்த வழக்கில், திங்கள்கிழமை (ஜூன் 22) தீா்ப்பளிக்கப்படவுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT