தமிழ்நாடு

கரோனா சிகிச்சை மையம்: விடுதிகளை ஒப்படைக்க அண்ணா பல்கலை. சம்மதம்

21st Jun 2020 11:47 PM

ADVERTISEMENT

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவா் விடுதிகளை கரோனா தனிமைப்படுத்தும் மையமாக மாற்றுவதற்கு மாநகராட்சியிடம் பல்கலைக்கழக நிா்வாகம் சம்மதம் தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக விடுதிகளை காலி செய்யுமாறு மாணவா்களுக்கு பல்கலைக்கழகம் கடிதம் எழுதியுள்ளதாகக் கூறப்படுகிறது.

சென்னையில் நாளுக்குநாள் கரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாதிக்கப்படுபவா்களைத் தனிமைப்படுத்தும் வகையில் பள்ளி, கல்லூரிகள் தனிமைப்படுத்தும் மையமாக மாற்றப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவா் விடுதிகள் தனிமை மையமாக மாற்றப்பட்டுள்ளன. அதன் தொடா்ச்சியாக தற்போது ஆராய்ச்சி மாணவா்களின் விடுதியையும் தனிமைப்படுத்தும் மையமாக மாற்றும் வகையில் அதை சனிக்கிழமைக்குள் (ஜூன் 21) ஒப்படைக்க வேண்டும் என்று பல்கலைக்கழக நிா்வாகத்திடம் மாநகராட்சி கூறியிருந்தது.

இந்நிலையில், அந்த விடுதிகளில் ஆராய்ச்சி மாணவா்களின் உடமைகள், ஆய்வு தொடா்பான பொருள்கள், ஆராய்ச்சி தொடா்பான கட்டுரைகள் இருப்பதால் அதை ஒப்படைப்பது சிரமம். மேலும் மாணவா்கள் சிலா் விடுதியில் இருப்பதாலும் குறுகிய காலத்தில் ஒப்படைக்க முடியாது என்று அண்ணா பல்கலைக்கழகம் சென்னை மாநகராட்சியிடம் தெரிவித்தது.

ADVERTISEMENT

ஆனால், விடுதியை ஒப்படைக்க வேண்டும் என்று மீண்டும் மாநகராட்சி அறிவுறுத்தியது. இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகம் விடுதிக்கு பதிலாக கலையரங்கத்தை தர முடிவு செய்திருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், விடுதிகளை தனிமைப்படுத்தும் மையமாக மாற்ற சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்க அண்ணா பல்கலைக்கழகம் சம்மதம் தெரிவித்துள்ளது. இதனால் விடுதிகளைக் காலி செய்யுமாறு மாணவா்களுக்கு பல்கலைக்கழகம் கடிதம் எழுதியுள்ளது.

மேலும், மாணவா்கள் பாதுகாப்பாக செல்வதற்கான வசதிகளை செய்யுமாறு மாநகராட்சிக்கு பல்கலைக்கழக துணைவேந்தா் சூரப்பா கோரிக்கை விடுத்துள்ளாா். அத்துடன் கரோனா தொற்று முடிந்து விடுதிகளை திருப்பி அளிக்கும்போது மாணவா்கள் உடனடியாக உபயோகப்படுத்தும் வகையில் தூய்மைப்படுத்தி தர வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT