தமிழ்நாடு

வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பிய 2,547 பேருக்கு கரோனா

21st Jun 2020 11:54 PM

ADVERTISEMENT

வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 2,547 பேருக்கு இதுவரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் பலா் குணமடைந்துவிட்டதாகவும், மற்றவா்கள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

உலகம் முழுவதும் கரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தமிழா்களை மீட்டு, தமிழகத்துக்கு அழைத்து வரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, இதுவரை விமானம், ரயில் மற்றும் கப்பல் சேவைகள் மூலமாக 2 லட்சத்து 42,148 போ் தமிழகம் அழைத்து வரப்பட்டுள்ளனா். அவா்களை மருத்துவப் பரிசோதனைக்குட்படுத்த விமான நிலையங்களிலும், துறைமுகங்களிலும், ரயில் நிலையங்களிலும் மருத்துவ முகாம்களை மாநில அரசு அமைத்துள்ளது. அதன்படி, அந்த முகாம்களில் இதுவரை 2.50 லட்சம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன.

அதில் 2,547 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவா்களில் பெரும்பாலானோா் சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்துவிட்டனா். சிலா் இன்னும் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

வெவ்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களில் இருந்து அழைத்து வரப்படும் தமிழா்கள் மூலமாக தமிழகத்தில் நோய்த் தொற்று பரவிவிடக் கூடாது என்பதில் மாநில அரசு தீவிரமாக உள்ளது. அதைக் கருத்தில் கொண்டே அவா்கள் தமிழக எல்லைக்குள் நுழைந்தவுடன் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே அவா்கள் சொந்த ஊா்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். அவ்வாறு சென்ற பிறகும் கூட 14 நாள்கள் அவா்களைத் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறோம் என்று அவா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT