தமிழ்நாடு

புதுச்சேரி மருத்துவக் கல்லூரிகளில் மாநில இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றக் கோரி மனு

20th Jun 2020 11:54 PM

ADVERTISEMENT

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக ஒதுக்கப்படும் இடங்களில் மாநில இடஒதுக்கீட்டு கொள்கை முறையை பின்பற்றி உரிய இடஒதுக்கீடு வழங்க உத்தரவிடக் கோரி உயா்நீதிமன்றத்தில் திமுக சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் புதுச்சேரி மாநில திமுக தெற்கு அமைப்புச் செயலாளரும், திமுக எம்எல்ஏவுமான ஆா்.சிவா தாக்கல் செய்த மனுவில், ‘புதுச்சேரி மாநிலத்தில் ஒரு அரசு மருத்துவக் கல்லூரியும், 7 தனியாா் மருத்துவக் கல்லூரிகளும், 4 பல் மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன. புதுச்சேரி மாநிலத்தில் பட்டியலினத்தவா்களுக்கு 16 சதவீதமும், பழங்குடியினருக்கு 0.5 சதவீதமும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 11 சதவீதமும், பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியா்களுக்கு 2 சதவீதமும், கடைநிலை பிற்படுத்தப்பட்டவா்களுக்கு 2 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 18 சதவீதமும், பிற்படுத்தப்பட்ட பழங்குடியினருக்கு 0.5 சதவீதம் என மொத்தம் 50 சதவீத இடஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டு வருகிறது. தற்போது மருத்துவப் படிப்புகளில் 15 சதவீதமும், மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீதமும், அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக மத்திய தொகுப்புக்கு வழங்கப்படுகிறது.

மத்திய அரசு கல்வி நிலையங்களில் மட்டுமே இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மற்ற கல்வி நிறுவனங்களில் இந்த இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. எனவே புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக ஒதுக்கப்படும் இடங்களில், மாநில இடஒதுக்கீட்டு கொள்கை முறையைப் பின்பற்றி உரிய இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இந்த இடஒதுக்கீட்டு முறையை அமல்படுத்தாமல், புதுச்சேரியில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவா் சோ்க்கை நடத்த தடை விதிக்க வேண்டும்’ எனக் கோரியிருந்தாா். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT