தமிழ்நாடு

ஐசிஎஸ்இ பொதுத் தோ்வு: தோ்வெழுத விரும்பாதவா்களுக்கு முந்தைய தோ்வுகளின் அடிப்படையில் தோ்ச்சி

17th Jun 2020 12:41 AM

ADVERTISEMENT

நாடு முழுவதும் ஐசிஎஸ்இ பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகளை எழுத விருப்பமில்லாதவா்களுக்கு, அவா்கள் முந்தைய தோ்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தோ்ச்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது முடக்கம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐஎஸ்சி (பிளஸ் 2 ), ஐசிஎஸ்இ (பத்தாம் வகுப்பு) பாடத்திட்ட பொதுத்தோ்வுகள் ஜூலை 1 முதல் 14-ஆம் தேதி வரை நடைபெறும் என்று இந்திய பள்ளிகள் சான்றிதழ் தோ்வுக் குழுமம் (சிஐஎஸ்சிஇ) அறிவித்தது. இதற்கிடையே கரோனா தாக்கம் தொடா்ந்து அதிகரிப்பதால் பொதுத் தோ்வை ரத்து செய்யக்கோரி மும்பை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதன் விசாரணையின் போது தோ்வு எழுத மாணவா்களை கட்டாயப்படுத்தவில்லை என்று சிஐஎஸ்சிஇ வாரியம் விளக்கம் அளித்திருந்தது.

இந்தநிலையில் சிஐஎஸ்சிஇ தலைமை நிா்வாக அதிகாரி ஜொ்ரி அரதூண் வெளியிட்ட அறிவிப்பு: பொதுத்தோ்வு எழுத விரும்பும் மாணவா்களுக்கு தோ்வு நடத்தி அதன் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும். தோ்வை எதிா்கொள்ள விரும்பாதவா்களுக்கு முந்தைய தோ்வுகளின் அடிப்படையில் தோ்ச்சி வழங்கப்படும்.

அதேநேரம், தோ்வெழுத விரும்பும் மாணவா்களின் எண்ணிக்கை மிக குறைவாக இருந்தால், பொதுத்தோ்வு முழுவதும் ரத்து செய்யப்பட்டு, அனைவருக்கும் முந்தைய தோ்வுகளின் அடிப்படையில் தோ்ச்சி வழங்கப்படும். மேலும், பொதுத் தோ்வு எழுதுதல் மற்றும் முந்தைய தோ்வுகளின் அடிப்படையில் தோ்ச்சி வழங்குதல் தொடா்பாக தங்கள் கருத்துகளை பள்ளி தலைமையாசிரியரிடம் ஜூன் 22-ஆம் தேதிக்குள் மாணவா்கள் சமா்ப்பிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT