தமிழ்நாடு

வனப்பகுதி வழியாக கேரளம் செல்ல முயன்ற 2 பேர் யானையிடம் சிக்கி லேசான காயம்

17th Jun 2020 01:24 PM

ADVERTISEMENT

 

தேவாரம் அருகே, வனத்துறை எச்சரிக்கையை மீறி வனப்பகுதி வழியாக கேரளத்துக்குச் செல்ல முயன்ற 2 பேர் ஒற்றை காட்டு யானையிடம் சிக்கி லேசான காயத்துடன் தப்பினர்.

தேவாரம், சாக்குலத்து மெட்டு வனப்பகுதிகளில் ஒற்றை காட்டு யானை சுற்றித் திரிந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதங்களில் மனித உயிர்களைப் பலிவாங்க அலையும் இந்த ஒற்றை காட்டு யானையிடம் சிக்கி இதுவரை 10-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்த ஆண்டும் ஒற்றை காட்டு யானை தேவாரம், சாக்குலத்துமெட்டு மலையடிவார பகுதிகளில் சுற்றித் திரிந்து வருகிறது. இதனால் இரவு நேரங்களில் யாரும் தோட்டங்களுக்கோ, வனப்பகுதிக்கோ செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு தேவாரம் அருகே டி.மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த முனியாண்டி (55) என்பவர் கேரள மாநிலம் ஏலத்தோட்டத்திற்குச் செல்ல திட்டமிட்டிருந்தார். தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு இ-பாஸ் பெற்றால் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில் முனியாண்டி சாக்குலத்துமெட்டு ஒற்றையடி வழிப்பாதை வழியாகச் செல்ல திட்டமிட்டு, இவருடன் ஆண்டிபட்டி அருகே வருசநாடு பொன்னன்படுகை கிராமத்தைச் சேர்ந்த ராஜாங்கம் என்பவரையும் அழைத்துக்கொண்டு சென்றார்.

ADVERTISEMENT

அப்போது கேரள எல்லையில் ஐயப்பன் கோவில் அருகே இருவரையும் ஒற்றை காட்டு யானை வழி மறித்தது. இதில் ராஜாங்கம் ஏற்கெனவே வன விலங்குகளை கையாளுவதில் தேர்ச்சி பெற்றவர் என்பதால் ஒற்றை காட்டு யானையிடமிருந்து புதரில் குதித்து தப்பினார். இதேபோல் முனியாண்டியும் காட்டுப்பாதை வழியாக ஓடித் தப்பினார். இதில் இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

இருவரையும் கேரள வனத்துறையினர் மீட்டு போடி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து  இருவரும் உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பின் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வனத்துறை எச்சரிக்கையை மீறி வனப்பகுதிக்குள் சென்றதால் காட்டுயானையிடம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT