சொந்த ஊருக்குத் திரும்பும் மக்களால் கரோனா தொற்று பரவுவதைத் தடுக்க, முழு பொது முடக்கம் வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா்கள் வலியுறுத்தியதை அடுத்தே, சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, சென்னை மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகளிலும் ஜூன் 19 முதல் 30-ஆம் தேதி வரை முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பிற்கான முக்கியக் காரணம் குறித்து அரசாணையில் தெரியவந்துள்ளது.
தலைமை செயலா் க.சண்முகம் தலைமையில் மாவட்ட ஆட்சியா்கள் ஆலோசனைக் கூட்டம் கடந்த 12-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, கரோனா பரவலைத் தடுக்க சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களில் கட்டுப்பாடு விதிக்க ஆலோசிக்கப்பட்டது. இதில், மூத்த காவல் அதிகாரிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா். கூட்டத்தில், கரோனா பரவலுக்கு மக்கள் அடா்த்தி, வீடுகள் நெருக்கமாக இருத்தல், சொந்த ஊருக்கு மக்கள் செல்வது உள்ளிட்ட காரணங்கள் சொல்லப்பட்டன. இதையடுத்து, முழு பொதுமுடக்கம் வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்தே, முழு பொது முடக்கம் பிறப்பிப்பட்டுள்ளதாக, அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.