தமிழ்நாடு

காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்களை ஒப்படைக்கத் தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு

17th Jun 2020 05:11 PM

ADVERTISEMENT

 

நாமக்கல்: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதற்கான காலாண்டு மற்றும் அரையாண்டு விடைத்தாள்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கரோனா பொது முடக்கத்தால் மார்ச் 27-ஆம் தேதி தொடங்க இருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின் ஜூன் 1ஆம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு பின் ரத்து செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஜூன் 15 முதல் 25 ஆம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்க் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததுடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்றமும் எதிர்ப்பு தெரிவிக்கவே தமிழக அரசு 10-ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி வெற்றி பெற்றதாக அறிவித்தது. 

வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் ஆகிய பாடத் தேர்வுகளை எழுதாத 11 ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் மாணவர்கள் வாங்கிய மதிப்பெண் விவரத்தையும், வருகைப் பதிவேட்டை யும் அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் சமர்ப்பிக்குமாறு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டிருந்தது. 

ADVERTISEMENT

இதற்கான வழிமுறைகள் தொடர்பான தகவல் கையேடு வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களில் நடைபெற்றது. நாமக்கல் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட 151 அரசு மற்றும் தனியார் பள்ளி தலைமையாசிரியர்கள், பள்ளி முதல்வர்கள் பங்கேற்ற கூட்டம் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நடைபெற்றது. 

இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பெ. அய்யண்ணன், மாவட்ட கல்வி அலுவலர் மு.ஆ. உதயகுமார் ஆகியோர் கலந்து மதிப்பெண் விவரங்களைத் தலைமை ஆசிரியர்கள் சமர்ப்பிக்க வேண்டியது தொடர்பாக விளக்கினர். அப்போது அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் அவர்களது மதிப்பெண் பதிவு அட்டை, ஒவ்வொரு பாட ஆசிரியரும் மாணவர் பெற்ற மதிப்பெண்ணுக்கு ஒப்புதல் வழங்கிய பதிவேடு ஆகியவற்றையும் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. 

பெரும்பாலான பள்ளிகளில் விடைத்தாள்கள் பாதுகாப்பாக வைத்திருக்கப்படாமல் தலைமையாசிரியர்கள் எடைக்கு போட்டு விட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் தனியார் பள்ளிகளில் காலாண்டு,  அரையாண்டு தேர்வுகளை தமிழக பள்ளிக் கல்வித்துறை வழங்கிய வினாத்தாள்கள் அடிப்படையில் நடத்தப்படவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதனால் மாணவர்களின் பெற்றோரை வரவழைத்து தனியார் பள்ளி நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது. 

வரும் 19-ஆம் தேதிக்குள் அரசு மற்றும் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் பள்ளிக் கல்வித்துறை இணையதளத்தில் இந்த பள்ளி மாணவ மாணவியரின் விவரங்களைப் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் காலாண்டு அரையாண்டு மதிப்பெண்கள் விவரத்தையும் பதிவிட்டு அது தொடர்பான பட்டியலை மாவட்ட கல்வி அலுவலகத்தில் வரும் 22 முதல் 27-ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டுமென கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT