தமிழ்நாடு

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு, தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கரோனாவுக்கு சிகிச்சை: சுகாதாரத்துறை பதில் மனு

17th Jun 2020 04:49 PM

ADVERTISEMENT

 

தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம், தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டங்களின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் கரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெறலாம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் ஜிம்ராஜ் மில்டன் தாக்கல் செய்த மனுவில், கரோனா நோய்த் தொற்றால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பது மற்றும் அவற்றை தடுக்கும் முதன்மை பணிகளில் மருத்துவர்கள்,செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். உயிர் காக்கும் சேவைகளில் ஈடுபட்டுள்ள இந்த முதல்நிலைப் பணியாளர்களுக்கு முழு உடல்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தனியார் மருத்துவமனைகள் அளிக்கும் கரோனா நோய்த் தொற்று சிகிச்சைக்கான செலவுகளை மத்திய மாநில அரசுகள் ஏற்க முடியுமா? அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகள் குறித்தும் பல்வேறு கேள்விகளை எழுப்பி பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

ADVERTISEMENT

இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். அப்போது தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சார்பில்  அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், தமிழகத்தில் 44 அரசு ஆய்வகங்கள், 33 தனியார் ஆய்வகங்கள் என மொத்தம் 77 ஆய்வகங்களில் கரோனா நோய்த் தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. 

கடந்த ஜூன் 11 ஆம் தேதி நிலவரப்படி 6 லட்சத்து 55 ஆயிரத்து 257 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 38 ஆயிரத்து 716 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் கரோனா நோய்த் தொற்றுக்காக தனியார் மருத்துவமனைகளில்  சசிகிச்சை பெறுபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.7ஆயிரத்து 500  வரை கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கரோனா நோய்த் தொற்றால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.15,000 சிகிச்சைக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், கரோனா நோய்த் தொற்று சிகிச்சைக்காக 25 சதவீத படுக்கைகளை ஒதுக்கி வைக்க தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம், தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தின் கீழும் கரோனாவுக்கு சிகிச்சை பெறலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மத்திய சுகாதாரத் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், தனியார் மருத்துவமனைகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் வருவதால், கரோனா நோய்த் தொற்று சிகிச்சைக்குத் தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக தமிழக அரசு தான் பதிலளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் விசாரணையை வரும் ஜூன் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT