தமிழ்நாடு

மருத்துவப் படிப்புகளில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

17th Jun 2020 12:16 PM

ADVERTISEMENT

 

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி தமிழக சுகாதாரத்துறை மற்றும் மதிமுக தொடர்ந்துள்ள வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்பு, டிப்ளமோ படிப்புக்களுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 50 சதவீதத்தை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கீடு செய்யக் கோரி திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த கோரிக்கை தொடர்பாக உயர்நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில், மருத்துவ மேற்படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு மத்திய தொகுப்பிலிருந்து 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி அதிமுக, திமுக, பாமக மற்றும் மதிமுக சார்பில் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம் மருத்துவ மேற்படிப்புக்காகத் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களை எதிர் மனுதாரர்களாகச் சேர்க்க உத்தரவிட்டு, மனுக்கள் தொடர்பாக வரும் ஜூன் 22-ஆம் தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

ADVERTISEMENT

இதே கோரிக்கையுடன் தமிழக அரசின் சுகாதாரத்துறை மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்குகளை நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த மனுக்கள் தொடர்பாக மத்திய அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டனர். மேலும் இதே கோரிக்கையுடன் அரசியல் கட்சிகள் தொடர்ந்துள்ள  வழக்குகளுடன் சேர்த்து வரும் ஜூன் 22-ஆம் தேதி இந்த வழக்குகளும் விசாரிக்கப்படும் எனக்கூறி விசாரணையை ஒத்திவைத்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT