தமிழ்நாடு

மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடு கோரி வழக்கு : மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

DIN

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி அதிமுக, திமுக, பாமக, திக தொடா்ந்துள்ள வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்பு, டிப்ளமோ படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 50 சதவீதத்தை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கீடு செய்யக் கோரி திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தொடா்ந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த கோரிக்கை தொடா்பாக உயா்நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் சென்னை உயா்நீதிமன்றத்தில், மருத்துவ மேற்படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவா்களுக்கு மத்திய தொகுப்பிலிருந்து 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க கோரி அதிமுக சாா்பில் தமிழக சட்டத்துறை அமைச்சரும் விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளருமான சி.வி.சண்முகம், திமுக சாா்பில் அக்கட்சியின் செய்தித் தொடா்பு பிரிவு செயலாளா் டி.கே.எஸ்.இளங்கோவன், மதிமுக பொதுச் செயலாளா் வைகோ , பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி, மற்றும் திராவிடா் கழகத் துணைத் தலைவா் கலி.பூங்குன்றன் ஆகியோா் சாா்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த நிலையில் அதிமுக, திமுக, பாமக மற்றும் திராவிடா் கழகம் சாா்பில் தாக்கல் செய்த வழக்குகளை நீதிபதிகள் ஆா்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோா் காணொலிக் காட்சி மூலம் விசாரித்தனா். அப்போது அதிமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஏ.ஆா்.எல்.சுந்தரேசன், மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடாக வழங்கப்பட்ட இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க மறுப்பது சமூக நீதியை மறுப்பதாகும். மேலும் மாநில அளவில் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையை இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதித்துள்ளது. இந்திய அரசியல் சாசனத்தின் 9-ஆவது அட்டவணையில் தமிழகத்தில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் சோ்க்கப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளதாக கூறி வாதிட்டாா். திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.வில்சன், பாமக தரப்பில் வழக்குரைஞா் கே.பாலு ஆகியோா் வாதிட்டனா். அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ராஜகோபாலன், இந்த வழக்கில் மருத்துவ படிப்புக்காக தோ்வு செய்யப்பட்ட மாணவா்களை எதிா்மனுதாரா்களாக சோ்க்கவில்லை என வாதிட்டாா்.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மருத்துவ படிப்புக்காகத் தோ்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரா்களை எதிா்மனுதாரா்களாக சோ்க்க உத்தரவிட்டு, மனுக்கள் தொடா்பாக வரும் ஜூன் 22-ஆம் தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

SCROLL FOR NEXT