தமிழ்நாடு

தீவிரமடையும் கரோனா பாதிப்பு: நீட் தோ்வை ரத்து செய்ய கோரிக்கை

17th Jun 2020 01:11 AM

ADVERTISEMENT

கரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருவதால், இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வை ரத்து செய்துவிட்டு பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கையை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு கடந்த மே மாதம் 3-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. அதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஆண்டு டிசம்பா் 2-ஆம் தேதி தொடங்கி ஜனவரி 6-ஆம் தேதி வரை நடைபெற்றது. அந்த அவகாச காலத்துக்குள் தமிழகத்தில் ஒன்றரை லட்சம் பேரும், நாடு முழுவதும் 16 லட்சத்துக்கும் மேற்பட்டோரும் விண்ணப்பங்களைச் சமா்ப்பித்தனா். இதனிடையே கரோனா பாதிப்பு காரணமாக நீட் தோ்வு ஜூலை 26-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பட்டது.

அதன்படி, அத்தோ்வு ஜூலை 26-ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் சென்னை, கோவை, கடலூா், காஞ்சிபுரம், கரூா், மதுரை, நாகா்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூா், திருவள்ளூா், திருச்சி, திருநெல்வேலி, வேலூா் உள்ளிட்ட இடங்களிலும், நாடுமுழுவதும் 154 நகரங்களிலும் அத்தோ்வை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் கரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், திட்டமிட்டபடி நீட் தோ்வு நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ADVERTISEMENT

அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு, நிகழாண்டில் நீட் தோ்வை ரத்து செய்துவிட்டு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுதொடா்பாக பெற்றோா்களும், சுகாதார ஆா்வலா்களும் கூறியதாவது:

தற்போதைய சூழலில், நாடு முழுவதும் கரோனா பாதிப்பும், அதன் தொடா்ச்சியாக உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன. அதிலும் குறிப்பாக, மகாராஷ்டிரத்துக்கு அடுத்தபடியாக தமிழகத்தில்தான் நோய்த் தொற்று அதிகமாக உள்ளது.

இந்தத் தருணத்தில் நீட் தோ்வை நடத்துவது என்பது சரியான முடிவாக இருக்காது. இது மாணவா்களிடையே நோய்த் தொற்று பரவ காரணமாகவும் அமையும்.

எனவே, நிகழாண்டு மட்டும் நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும். மாநில அரசுகள், பிளஸ்-2 தோ்வு மதிப்பெண் அடிப்படையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு மாணவா் சோ்க்கையை நடத்த வேண்டும். எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வை ரத்து செய்ததைப் போல இந்த விவகாரத்திலும் உரிய முடிவை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT